T20 World Cup | மோடி முதல் தோனி வரை... பிரபலங்களின் வாழ்த்து மழையில் இந்திய அணி..

cricket-celebrities-from-pm-modi-to-dhoni-wishes-after-india-wins-t20-world-cup-2024
  • Publisher : news18
  • Author : -
  • Last Update : 2024-06-30 10:06:00

20 ஓவர் உலகக்கோப்பையை ஏந்திய இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரை பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாக வெள்ளத்தில் மிதந்தனர்.

2007 ஆம் ஆண்டிற்கு பிறகு ரோகித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி, டி 20 உலகக்கோப்பையை வென்று அசத்தியது. இதற்கு வாழ்த்து தெரிவித்த குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, இந்திய அணியின் விடாமுயற்சியால், நடப்பு தொடர் முழுவதும் இக்கட்டான சூழலிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதாக புகழாரம் சூட்டியுள்ளார்.

My heartiest congratulations to Team India for winning the T20 World Cup. With the never-say-die spirit, the team sailed through difficult situations and demonstrated outstanding skills throughout the tournament. It was an extraordinary victory in the final match. Well done, Team…

இதே போன்று, இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, நமது கிரிக்கெட் அணியால் நாடு பெருமை கொள்வதாக வீடியோ வெளியிட்டுள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டவர்களும் இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

சூர்யகுமார் யாதவின் அசாத்திய கேட்சை புகழ்ந்துள்ள, மக்களவை எதிர்க்கட்சித்தலைவர் ராகுல் காந்தி, ரோகித்தின் தலைமைப் பண்புக்கு இவ்வெற்றி ஒரு சான்று என்று பாராட்டியுள்ளார்.

இந்திய அணி 2 ஆவது முறையாக உலகக்கோப்பையை ஏந்தியதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் வாழ்த்து தெரிவித்துள்ளார். சவாலான சூழலில், ஒப்பற்ற திறமையால், இந்திய அணி அசாத்திய சாதனையை படைத்திருப்பதாக முதலமைச்சர் பாராட்டியுள்ளார்.

இவற்றுடன், இந்திய அணியின் வெற்றியை நாடு முழுவதும் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடினார். ஜம்மு காஷ்மீரில் கிரிக்கெட் ரசிகர்கள், பட்டாசு வெடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இதே போன்று, டெல்லியிலும் கிரிக்கெட் ரசிகர்கள் வீதிகளில் நடனமாடி உற்சாகம் அடைந்தனர். மகாராஷ்ட்ரா மாநிலம் மும்பையில் விமானநிலையத்திற்குள் இந்திய அணியின் வெற்றியை ரசிகர்கள் கொண்டாடினர். புனேவிலும் இந்திய அணியின் வெற்றியை ரசிகர்கள் ஆட்டம் போட்டு மகிழ்ந்தனர்.

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர், கேரளா மாநிலம் எர்ணாக்குளம் என நாடு முழுவதும் கிரிக்கெட் ரசிகர்களின் கொண்டாட்டத்தை பார்க்க முடிந்தது. நடன இயக்குநரும், திரைப்பட நடிகருமான பிரபுதேவா இந்திய அணியின் வெற்றியை கொண்டாடிய காணொலியும் வெளியானது.

தமிழ்நாட்டிலும் சென்னை, கோவை உட்பட பல்வேறு நகரங்களில் இந்திய அணியின் வெற்றியை ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

மேலும் 20 ஓவர் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு, முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தை பார்த்த போது தனது இதய துடிப்பு எகிறியதாக குறிப்பிட்டுள்ளார். அமைதியாகவும், தன்னம்பிக்கையுடனும் விளையாடி வெற்றிப்பெற்றதற்கு வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ள தோனி, உலகக்கோப்பையை மீண்டும் இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கு நன்றி என்று பதிவிட்டுள்ளார். மேலும் தனது பிறந்தநாளுக்கு விலைமதிப்பற்ற பரிசாக இதை கருதுவதாகவும் தோனி நன்றி தெரிவித்துள்ளார். சர்வேதசே கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற தோனி, முதன் முறையாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்திய அணியின் வெற்றியை வாழ்த்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இதே போன்று இந்திய கிரிக்கெட் அணிக்கு முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இந்திய அணி பெறும் ஒவ்வொரு சாதனைகளும், நாட்டில் உள்ள எதிர்கால குழந்தைகள் தங்கள் கனவை நோக்கி செல்வதற்கான உந்துதலை அளிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2007 ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளில் தோல்வி அடைந்த இந்திய அணி, கிரிக்கெட்டில் அசுர வளர்ச்சி அடைந்து, தற்போது அதே மண்ணில் உலகக்கோப்பையை வென்றிருப்பதாக பதிவிட்டுள்ளார். மேலும், ராகுல் டிராவிட், ரோகித் ஷர்மா, பும்ரா, கோலிஉட்பட அனைத்து வீரர்களுக்கும் சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Ads
Recent Sports News
Trending News
Recent News
Prev
Next