நடிகர் சல்மான் கான் கொலை முயற்சியின் பின்னணி இதுதான்? - வெளியான அதிர்ச்சி தகவல்!

what-is-behind-the-attempt-to-kill-actor-salman-khan
  • Publisher : news18
  • Author : -
  • Last Update : 2024-07-03 09:43:00

பாலிவுட் நடிகர் சல்மான் கானை கொலை செய்ய, சிறையில் இருந்தபடியே ஸ்கெட்ச் போட்ட லாரன்ஸ் பிஸ்னோய் 25 லட்சத்திற்கு தனது அடியாட்களை நியமித்திருந்த அதிர்ச்சித் தகவல் தற்போது தெரியவந்துள்ளது.

பிஷ்னோய் சமூகத்தினர் தெய்வமாக வழிபட்டு வரும் மானை நடிகர் சல்மான் கான் வேட்டையாடியது அச்சமூகத்தினரிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. அது முதல் மோதல் போக்கை கடைப்பிடித்து வரும் பிஷ்னோய் சமூகத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி லாரன்ஸ் பிஷ்னோய் நடிகர் சல்மான் கானுக்கு பல்வேறு கொலை மிரட்டல்களை தொடர்ந்து விடுத்து வருகிறார்.

தற்போது சிறையில் இருக்கும் லாரன்ஸ் பிஷ்னோய் சில மாதங்களுக்கு முன் தனது அடியாட்கள் மூலம் சல்மான் கான் வீட்டின் மீது துப்பாக்கி சூடு நடத்தி அப்பட்டமாக கொலை மிரட்டல் விடுத்திருந்தார். உஷாரான மும்பை போலீசார் துப்பாக்கிசூடு நடத்திய குற்றவாளிகளை விரட்டி விரட்டி வேட்டையாடினர். பலர் கைது செய்யப்பட்டனர். துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இச்சதித்திட்டத்தில் எத்தனை பேர் ஈடுபட்டிருக்கிறார்கள் என தீவிர விசாரணையில் இறங்கிய போலீசாருக்கு அடுத்தடுத்து பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன ரகசியத் தகவலின் பேரில் நவிமும்பையில் போலீசார் நடத்திய ரெய்டில் சல்மான் கானை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியது தொடர்பாக அஜய் காஷ்யப், கெளதம் வினோத் பாட்டியா, வாஷ்பி சீனா, ரிஸ்வான் உசேன், தீபக் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களில் காஷ்யப் என்பவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஏராளமான செல்போன்களின் மூலம் பல்வேறு திடுக்கிடும் உண்மைகள் தெரியவந்தன. பிடிபட்ட இந்த கும்பல் நடிகர் சல்மான் கானுக்கு பன்வெல் பகுதியில் இருக்கும் பண்ணை வீட்டை தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளனர். இதற்காக பன்வெல் பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து ரகசியமாக சதித்திட்டத்தை தீட்டி வந்துள்ளனர். இவ்வழக்கு விசாரணை முடிந்து தற்போது போலீசார் 350 பக்க குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.

அதில் குற்றவாளிகளின் சதித்திட்டம் குறித்த பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சிறையில் இருக்கும் லாரன்ஸ் பிஷ்னோய் நடிகர் சல்மான் கானை கொலை செய்யும் வேலையை 25 லட்சத்திற்கு தனது அடியாள்களிடம் ஒப்படைத்துள்ளான். இக்கொலைக்காக அவர்கள் தனியாக ஒரு வாட்ஸ்ஆப் குரூப் ஒன்றையும் தொடங்கியுள்ளனர். அதில் 17 பேர் உறுப்பினர்களாக இருந்துள்ளனர்.

அந்த குரூப்பில் லாரன்ஸ் பிஷ்னோய், அவரது சகோதரர் அன்மோல் பிஷ்னோய், கோல்டி பிரர், அஜய் காஷ்யப் உள்ளிட்டோர் உறுப்பினர்களாக இருந்துள்ளனர். அந்த கும்பலில் இருவர் சல்மான் கானின் பண்ணை வீட்டிற்கு சென்று தொடர்ந்து நிலவரத்தை ஆய்வு செய்து வந்துள்ளனர்.

அதோடு சல்மான் கான் படப்பிடிப்புக்கு செல்லும் கோரேகான் பிலிம் சிட்டி, சல்மான் கானின் மும்பை பாந்த்ரா வீடு ஆகியவற்றையும் அவர்கள் கண்காணித்துள்ளனர். மாலை நேரத்தில் பன்வெல் ஆட்டோ ரிக்‌ஷா நிறுத்தும் இடத்தில் நின்று கொண்டுதான் ஆலோசனை நடத்துவதை இவர்கள் வழக்கமாக கொண்டிருந்தனர். அவர்கள் பயன்படுத்திய மொபைல் போன் சிக்னல், ஜி.பி.எஸ், கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீஸார் குற்றபத்திரிகையில் சாட்சியங்களாக சேர்த்துள்ளனர்.

சல்மான் கான் மீது தாக்குதல் நடத்துவதற்குத் தேவையான துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை பாகிஸ்தானிலிருந்து வாங்கவும் திட்டமிட்டு இருந்தனர். இந்த அனைத்துத் தகவல்களும் காஷ்யப்பிடமிருந்து மீட்கப்பட்ட செல்போன் மூலம் போலீசாருக்கும் தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இருந்து கடந்த ஏப்ரல் மாதம் வரை அவர்கள் இதற்காக சதித்திட்டம் தீட்டி அதற்கான முன்னேற்பாடுகளை செய்து வந்துள்ளனர்.

இச்சதியில் ஒட்டுமொத்தமாக 60 முதல் 70 பேர் வரை ஈடுபட்டிருப்பதாக தெரியவந்துள்ளது. துப்பாக்கிச்சூடு நடத்துவதற்காக 18 வயதுக்கு குறைவான நபர்களையும் தேர்வு செய்து வைத்திருந்தனர். ஆனால் அதற்குள் அனைவரும் பிடிபட்டுள்ளனர். கொலை செய்து விட்டு அனைவரும் கன்னியாகுமரி சென்று அங்கிருந்து படகு மூலம் இலங்கைக்கு சென்று அங்கிருந்து பல்வேறு நாடுகளுக்கு தப்பிச்செல்ல திட்டமிட்டு இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

Ads
Recent National News
Trending News
Recent News
Prev
Next