வரலாறு முக்கியம்! - உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி கடந்து வந்த பாதை இதுதான்!

cricket-the-path-of-the-indian-cricket-team-in-this-t20-world-cup
  • Publisher : news18
  • Author : -
  • Last Update : 2024-06-30 08:34:00

தோல்வியே சந்திக்காமல் இறுதி வரை வந்து தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி டி-20 உலகக்கோப்பை தொடரில் கடந்து வந்த பாதையை தற்போது பார்க்கலாம்.

நடப்பு டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் லீக், சூப்பர் 8, அரையிறுதி, இறுதிப்போட்டி என்ற வடிவத்தில் நடத்தப்பட்டது. அந்த வகையில் 20 அணிகள் பங்கேற்றதில் ஐந்து அணிகளாக நான்கு குரூப்கள் பிரிக்கப்பட்டன. இதில் இந்திய அணி இடம்பெற்றிருந்த ஏ குரூப்பில் பாகிஸ்தான், அமெரிக்கா, கனடா, அயர்லாந்து ஆகிய அணிகள் இடம்பெற்றிருந்தன.

அயர்லாந்து அணிக்கு எதிரான முதல் லீக் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அசத்தல் வெற்றியை பதிவு செய்தது. 96 ரன்களுக்குள் அயர்லாந்தை சுருட்டி அசால்டாக ரோஹித்தின் அரைசதத்தில் 12.2 ஓவரிலேயே இலக்கை எட்டியது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது லீக் போட்டியில் 6 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று பாகிஸ்தானை வீட்டுக்கு அனுப்பியது இந்திய அணி. இதில் பும்ரா வீழ்த்திய மூன்று விக்கெட்டுகள் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

இதையடுத்து அமெரிக்காவிற்கு எதிரான மூன்றாவது போட்டியில் ஏழு விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றியை வசப்படுத்தி ஹாட்ரிக் வெற்றியை ருசித்தது இந்தியா. கனடாவிற்கு எதிரான போட்டி மழையால் கைவிடப்பட, மூன்று வெற்றிகளோடு லீக் சுற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடம் பிடித்து சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது இந்தியா.

லீக் சுற்றைப்போலவே சூப்பர் 8 சுற்றும் எட்டு அணிகளை இரண்டு குழுக்களாக பிரித்து போட்டிகள் நடத்தப்பட்டன. அதன் அடிப்படையில் இந்திய அணியுடன் ஆஸ்திரேலியா, ஆஃப்கானிஸ்தான், வங்கதேசம் என குரூப் ஒன்னில் மூன்று அணிகள் சேர்ந்து கொள்ள மூன்றையும் அசால்டாக வீழ்த்தி சூப்பர் 8 சுற்றிலும் முதலிடம் பிடித்தது இந்தியா.

முதல் போட்டியில் ஆஃப்கானிஸ்தானை 47 ரன்கள் வித்தியாசத்திலும் இரண்டாவது போட்டியில் வங்கதேசத்தை 50 ரன்கள் வித்தியாசத்திலும் வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பை பிரகாசப்படுத்தியது.

பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்தி 2023 உலகக்கோப்பை பைன்ஸ் தோல்விக்கு பழிதீர்த்ததுடன் சூப்பர் 8 சுற்றில் மீண்டும் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்து அசத்தியது இந்தியா.

ரோஹித்தின் 92 ரன்கள் ஆஸ்திரேலியாவை அரையிறுதிக்கு கூட முன்னேறவிடாமல் நடையை கட்டச்செய்தது. லீக், சூப்பர் 8 என அனைத்திலும் வெற்றியை வசப்படுத்திய இந்தியா அரையிறுதியில் இங்கிலாந்தை ஊதி தள்ளியது. இந்த வெற்றி கடந்த 2022 அரையிறுதியில் இங்கிலாந்திடம் இந்தியா பெற்ற தோல்விக்கு பதிலடியாக இருந்தது.

இந்தியாவை போல் தோல்வியே சந்திக்காமல் இறுதிப்போட்டியில் வென்று முதல்முறையாக கோப்பையை வெல்லும் கனவுடன் வந்த தென்னாப்பிரிக்காவையும் இந்திய அணி வீரர்கள் பதம் பார்த்தனர். பரபரப்பான இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி 2வது முறையாக உலகக்கோப்பையை தட்டிச் சென்றது.

Ads
Recent Sports News
Trending News
Recent News
Prev
Next