அதே மைதானம்.. அன்று கேப்டனாக தோல்வி.. இன்று பயிற்சியாளராக வெற்றி... சாதித்துக்காட்டிய ராகுல் டிராவிட்

cricket-rahul-dravid-retires-after-winning-the-2024-t20-worldcup-finals-ind-vs-sa
  • Publisher : news18
  • Author : -
  • Last Update : 2024-06-30 08:07:00

இந்திய அணியின் வீரராக இருந்த போது நிறைவேறாத கனவை, பயிற்சியாளராக நிறைவேற்றி, மனநிறைவுடன் விடைபெறுகிறார் ராகுல் டிராவிட். இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட்டின் சாதனைப் பயணத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2007 ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளில் உள்ள பார்படாஸில் நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், ராகுல் டிராவிட் தலைமையிலான இந்திய அணி படுதோல்வி அடைந்தது. இதில், ஏற்பட்ட விரக்தி மற்றும் விமர்சனக் கனைகளால் கிரிக்கெட்டில் இருந்தே ஓய்வு பெற்றார் ராகுல் டிராவிட். ஆனால், வீரராக விடைப்பெற்ற மண்ணிலேயே பயிற்சியாளராக இந்திய அணிக்கு கோப்பை வென்றுக் கொடுத்து தனது கனவை நிறைவேற்றிக் கொண்டார் ராகுல் டிராவிட்.

கடந்த 2014 ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளராக இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ராகுல் டிராவிட், இங்கிலாந்து சென்ற இந்திய அணிக்கு ஆலோசகராகவும் பணியாற்றினார். இதனை தொடர்ந்து, 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட ராகுல் டிராவிட், பல்வேறு திறமையான வீரர்களை பட்டைத்தீட்டினார். 4 ஆண்டுகள் இளம் படையை வழிநடத்திய ராகுல் டிராவிட்டிற்கு, 2021 ஆம் ஆண்டு இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.

அதன்பிறகு, இந்திய அணியின் வெற்றிகள் ஏறுமுகமாகவே இருந்தன. உலகில் தலை சிறந்த அணியாக இந்தியா உருவெடுத்தது. அவரின் வழிகாட்டுதலில் 56 ஒருநாள் போட்டிகளை எதிர்கொண்ட இந்திய அணி 41-ல் வெற்றி பெற்றது. இதே போன்று, 20 ஓவர் போட்டிகளிலும், டெஸ்ட் தொடரிலும் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது. அனைத்திற்கும் மேலாக, அனைத்து வகையான போட்டிகளிலும் இந்திய அணி முதலிடம் பிடித்ததில் ராகுல் டிராவிட்டின் பங்கு முக்கியமானது.

ஆனால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் 2023 50 ஓவர் உலகக்கோப்பை போட்டிகளில் இந்திய அணி அடைந்த தோல்வி, ராகுல் டிராவிட் மீது மீண்டும் விமர்சனங்களை வீசத் தொடங்கின. ஆனால், விமர்சனங்களை கண்டு கலங்காமல் தொடர்ந்து அணியை திறம்பட வழிநடத்திய ராகுல் டிராவிட், 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவிற்கு கோப்பையை வாங்கி கொடுத்துள்ளார்.

தொண்டர்களை விட, தலைவர்களை உருவாக்குவதே தலைமைப் பண்புக்கு அழகு என்பதற்கு ஏற்ப, இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய தலைவர்களையும் ராகுல் டிராவிட் இனங்கண்டார். ஹர்திக் பாண்டியா, ஷூப்மன் கில் ஆகியோருக்கு தலைமைப் பண்புக்கான பயிற்சியையும் ராகுல் டிராவிட் வழங்கினார். இந்திய அணியின் அசைக்க முடியாத சுவர், அமைதிப்புயல் என பெயர் எடுத்த டிராவிட், வீரராக மட்டுமின்றி பயிற்சியாளராகவும் தனி முத்திரையை பதித்துள்ளார்.

தனது கிரிக்கெட் பயணத்தின் முதல் இன்னங்ஸில் வீரராக தோல்வியுடன் விடைப்பெற்ற ராகுல் டிராவிட், இரண்டாவது இன்னிங்ஸில் பயிற்சியாளராக வெற்றி வாகை சூடியுள்ளார். எப்போதும் அமைதியான முகத்துடன் காணப்படும் டிராவிட், தான் தோற்ற பார்படாஸ் களத்திலேயே கோலி கைகளில் இருந்து உலகக்கோப்பையை வாங்கியதும் ஆராவாரத்துடன், மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

Ads
Recent Sports News
Trending News
Recent News
Prev
Next