விஜய்யின் மாஸ் என்ட்ரி முதல் மாணவர்களுக்கு சொன்ன அட்வைஸ் வரை - த.வெ.க கல்வி விருதுகள் விழா ஹைலைட்ஸ்!

cinema-award-ceremony-by-vijay-to-students-of-10th-and-12th-function-highlights
  • Publisher : news18
  • Author : -
  • Last Update : 2024-06-30 12:35:00

10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் சிறப்பு மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கல்வி விருது, ஊக்கத் தொகை, மாணவிகளுக்கு வைரக் கம்மல், வைர மோதிரம், மாணவர்களுக்கான விஜய்யின் அறிவுரைகள், தடபுடலான விருந்து, அடுத்த முதல்வர் விஜய் தான் என அடுத்தடுத்து எழுந்த குரல்கள் என கோலாகலமாக அரங்கேறியது கல்வி விருது வழங்கும் விழா…

பத்து மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு கடந்த ஆண்டில் நடிகர் விஜய் விருது வழங்கி கவுரவித்தார். அரசியல் கட்சியை தொடங்குவதாக அறிவித்த பிறகு, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக இந்த ஆண்டில் நடிகர் விஜய் விருது வழங்குவதால் எதிர்பார்ப்பும் அதிகரித்தது. இரண்டு கட்டங்களாக விருது விழா அறிவிக்கப்பட்டு, முதல் கட்ட விழா, சென்னை திருவான்மியூரில் உள்ள மண்டபத்தில் நடைபெற்றது. 21 மாவட்டங்களில் சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த 800 மாணவ, மாணவிகள், அவரது பெற்றோர், உடன்பிறந்தவர்கள் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இதன்படி, விழாவில் தங்களது பெற்றோருடன் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு தின்பண்டங்கள் கொடுக்கப்பட்டு, விழா நடைபெறும் அரங்கிற்குள் அனுப்பி வைக்கப்பட்டனர். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில், விழா அரங்கிற்கு வந்த விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நெல்லையில் சாதிய வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட நிலையில், உடல்நலம் தேறி 12-ஆம் வகுப்பு தேர்வில் சிறப்பான தேர்ச்சியை பெற்ற மாணவன் சின்னதுரைக்கு அருகே சென்று அமர்ந்தார் விஜய். சின்னதுரை உடன் கலந்துரையாடிய விஜய், அவருடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார். அரங்கின் இருபுறமும் அமர்ந்திருந்த மாணவ, மாணவிகள் மத்தியில் பல்வேறு இடங்களுக்கு சென்று அமர்ந்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார் விஜய்.

அதன் பின், பெண் ஒருவர் விஜய்க்கு நெற்றியில் பொட்டு வைத்து மகிழ்ந்தார். பின்னர் ஆளப்போறான் தமிழன் என்ற பாடல் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்க, விழா மேடைக்கு சென்றார் விஜய். மாணவ, மாணவிகளின் உற்சாக கரகோஷத்துக்கு மத்தியில் சிறப்புரை ஆற்றிய அவர், மாணவர்கள் தங்களுக்குப் பிடித்த துறையை தேர்வுசெய்து முழு ஈடுபாட்டுடன் செயல்பட வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். மேலும், நமக்கு நல்ல தலைவர்கள் தேவைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். அரசியலையும் ஒரு எதிர்கால வாய்ப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மாணவர்களுக்கு விஜய் அறிவுரை வழங்கினார்.

எது நல்லது, எது பொய் என்பதை கற்றுக் கொண்டு, நல்ல தலைவர்களை தேர்ந்தெடுக்கும் விசாலமான பார்வையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார். போதைப் பொருள் பழக்கத்திலிருந்து மாணவர்கள் விடுபட வேண்டும் என்று விஜய் கேட்டுக் கொண்டார். தேர்வில் விரும்பியபடி அதிகளவு மதிப்பெண் எடுக்காதவர்கள் மற்றும் தேர்ச்சி பெறாதவர்கள் அதைப் பற்றி கவலைப்படாமல் வெற்றி, தோல்வியை சரிசமமாக பார்க்க வேண்டும் என்று விஜய் கேட்டுக் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு விருது வழங்கத் தொடங்கினார். 12-ஆம் வகுப்பில் சிறப்பிடம் பெற்ற சென்னை கொளத்தூரைச் சேர்ந்த பிரதிக்ஷா, திருப்பூர் பல்லடத்தைச் சேர்ந்த மகாலட்சுமி, செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரத்தைச் சேர்ந்த தோஷிதா லட்சுமி, 10-ஆம் வகுப்பில் சிறப்பிடம் பெற்ற தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களான தேவதர்ஷினி, சந்தியா, திண்டுக்கல் ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த காவிய ஸ்ரீ, ஈரோடு கோபிசெட்டிபாளையத்தைச் சேர்ந்த கோபிகா, ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் காவியா ஜனனி, நெல்லை மாவட்டம், ராதாபுரத்தைச் சேர்ந்த சஞ்சனா அதுஷ் ஆகிய 9 பேருக்கு வைர கம்மல், வைர மோதிரம் ஆகியவற்றை பரிசாக விஜய் வழங்கினார். மேலும், ஊக்கத் தொகை வழங்கினார்.

10-ஆம் வகுப்பு தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்ற நிலையில், விஜயின் விருது விழாவை பார்த்து நன்றாகப் படித்து தற்போது விருது வாங்கியிருப்பதாக பெருமிதத்துடன் கூறினார் மாணவி நந்தினி. வருங்கால முதல்வரிடம் விருதை வாங்குவதை நினைத்து பெருமைப்படுவதாக துறையூரைச் சேர்ந்த மாணவி கனிஷ்கா குறிப்பிட்டார். மாணவி ஒருவர், தனது தாய்க்கு சால்வை அணிவிக்குமாறு கேட்டுக் கொண்டார், அதனை விஜய் நிறைவேற்றினார். இதேபோல, மாணவ, மாணவிகளின் பல்வேறு கோரிக்கைகளையும் விஜய் நிறைவேற்றினார். முதலமைச்சராக பதவியேற்றதும் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று மாணவனின் தந்தை ஒருவர் கோரிக்கை விடுத்தார்.

சட்டப்பேரவையில் ஜீன்ஸ் பேன்டுடன் அமைச்சர்கள் இருக்க வேண்டும் என்று மதுரையைச் சேர்ந்த மாணவியின் தாய் வேண்டுகோள் விடுத்தார். தேனியைச் சேர்ந்த விதர்ஷனா வாசித்த கவிதையை உற்சாகத்துடன் கேட்டு மகிழ்ந்தார் விஜய் நிச்சயம் அடுத்த முதல்வராக விஜய் வருவார் என மாணவி ஒருவர் குறிப்பிட்டார். மேடையில் மாணவர் உடன் வந்த குழந்தையை நடிகர் விஜய் கியூட்டாக பார்த்துக் கொண்டே இருந்தது ரசிக்கும் வகையில் அமைந்தது.

பரிசு பெற்ற மாணவி ஒருவர், FLYING KISS கொடுக்க வேண்டும் என்று கேட்கவே, விஜய் மென்மையான புன்னகையுடன் அதை மறுத்துவிட்டார். தொடர்ந்து பரிசுபெற்ற மாணவர் ஒருவரின் தந்தை தான் ஒரு மாற்றுத்திறனாளி என்று கூறவே, நடிகர் விஜய் அவருடன் தனியாக புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

மேலும், CHUBBY-ஆக வந்த சிறுவனின் கன்னத்தையும் கொஞ்சி விளையாடினார் விஜய். இதற்கு இடையே, மதிய வேளையில் 5 நிமிடம் சாப்பிட்டுவிட்டு வருவதாக அனுமதி பெற்று விட்டுச் சென்றார். சுமார் 10 மணி நேரம் நீடித்த விருது வழங்கும் நிகழ்ச்சியை நிறைவு செய்து வணக்கம் கூறிவிட்டு விஜய் மேடையிலிருந்து கிளம்பினார்.

Ads
Recent Cinema News
Trending News
Recent News
Prev
Next