மக்களே உஷார்.. தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை... எங்கெல்லாம் தெரியுமா?
தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி காணப்படுகிறது. இதனால் தமிழ்நாட்டில் மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதேபோல ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
சென்னையைப் பொருத்தவரையில் மேகமூட்டமாக இருக்கும் இன்றும் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, வளிமண்டல சுழற்சி காரணமாக திருவாரூர் பகுதிகளில் விடிய, விடிய மழை பெய்தது. இதேபோல் நாகை மாவட்டத்திலும் கனமழை பெய்தது.
தஞ்சாவூரில் பெய்த கனமழையால் நெல் வயல்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால், அம்மாபேட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாற்று நடவு செய்து 20 நாட்களே ஆன சம்பா, தாளடி பயிர்கள் முற்றிலும் நீரில் மூழ்கியுள்ளன.
திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம், மாப்பிள்ளைகுப்பம், சன்னாநல்லூர், ஆண்டிப்பந்தல், கம்மங்குடி உள்ளிட்ட இடங்களில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டியது. நன்னிலம் 6 செ.மீ மழை பதிவானது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில், கொள்ளிடம் உள்ளிட்ட பகுதிகளில் விட்டு விட்டு கனமழை பெய்தது. சீர்காழியில் எஸ்.கே. நகர், அபிராமி நகர் உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகளைச் சுற்றி தண்ணீர் சூழ்ந்ததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
இதற்கிடையே, தஞ்சை மாவட்டத்திலும் சில இடங்களில் பரவலாக மழை பெய்து வருவதை அடுத்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது தொடர்பாக அந்தந்தப் பள்ளி தலைமையாசிரியர்கள் முடிவெடுக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் அறிவித்துள்ளார்.