“வெற்றி பெற ஒற்றுமையாக செயல்படுவோம்” - முன்னாள் அமைச்சர் தங்கமணி
2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்கான ஆயத்தப் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கியுள்ளன. அதிமுகவின் செயல்பாடுகளை ஆய்வு செய்ய முன்னாள் அமைச்சர்கள் அடங்கிய 10 பேர் கொண்ட கள ஆய்வுக் குழுவை எடப்பாடி பழனிசாமி அமைத்திருக்கிறார்.
அதில், கே.பி. முனுசாமி, நத்தம் விசுவநாதன், திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி. வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார், சி.வி. சண்முகம், செம்மலை, பா.வளர்மதி, வரகூர் அருணாச்சலம் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
அதிமுகவில் அனைத்து மாவட்டங்களிலும் கட்சி பணிகளில் நிர்வாகிகள் எப்படி ஈடுபட்டு வருகிறார்கள்?, உறுப்பினர் அட்டைகள், அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு சரியாக சென்று சேர்ந்துள்ளதா? என்பதை கண்காணித்து, டிசம்பர் 7ஆம் தேதிக்குள் அதிமுக தலைமையிடம் கள ஆய்வு அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
அதன்படி இன்று திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக கள ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர்களும், கள ஆய்வுக் குழு உறுப்பினர்களுமான தங்கமணி மற்றும் திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதில் பேசிய முன்னாள் அமைச்சர் தங்கமணி, “அதிமுக கோட்டையாக இருந்த திருச்சி மாவட்டத்தில் கடந்த இரு தேர்தல்களில் ஏன் வெற்றி வாய்ப்பை இழந்தோம். நமக்குள் கருத்து வேறுபாடு இருக்கிறது. ஒருவரை வேட்பாளராக அறிவித்தால் மற்றவர்கள் அவரை ஏற்க மறுப்பது உள்ளிட்ட காரணங்களால் வெற்றி வாய்ப்பை இழந்துவிட்டோம். எனவே 2026 தேர்தலில், அதுபோன்ற நிலை மீண்டும் வந்தால் நம் இயக்கத்தில் இருப்பவர்களை யார் காப்பாற்றுவார்கள்.
நம் உடலில் ஓடுவது அதிமுக ரத்தம். இங்கு ஒவ்வொருவருக்கும் துரோகம் அல்லது தியாக ரத்தம் ஓடிக்கொண்டிருக்கிறது. எனவே இந்த இயக்கத்தை வெற்றி பெறவைப்பதே நமது எண்ணமாக இருக்க வேண்டும்.
பொதுச்செயலாளர் யாருக்கு வாய்ப்பு கொடுத்தாலும், நமக்கு தெரியவேண்டியது எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி, இவர்களுக்கெல்லாம் மேலாக நமது சின்னம் இரட்டை இலை. ஒரு குடும்பத்தில் அண்ணன் தம்பி பிரச்சனை இருக்கலாம். அப்போது மூன்றாவது நபர் உள்ளே வந்தால் நாம் குடும்பமாக ஒற்றுமையாகிவிடுவோம். அதுபோல், நமக்குள் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், இயக்கம் என்று வந்தபிறகு அதற்காக நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும்” என்றார்.
அதேபோல் திண்டுக்கல் சீனிவாசன், “கூட்டணி தொடர்பான விஷயங்களை நான் பார்த்துக்கொள்கிறேன் என எடப்பாடி பழனிசாமி சொல்லிவிட்டார். கூட்டணிக்கு யார் வந்தாலும், 20 சீட், ரூ. 50 கோடி அல்லது ரூ. 100 கோடி கொடுங்கள் என கேட்கின்றனர். ஏதோ நெல், அரிசி விற்பது போல் பேரம் பேசுகிறார்கள்.
கூட்டணிக்கு எடப்பாடி பழனிசாமி பேசி கொண்டு இருக்கிறார். விரைவில் நல்ல செய்தி வரும். கள ஆய்வு என்பது நிர்வாகிகளை உற்சாகப்படுத்துவதுதான். எனவே நிர்வாகிகள் தீவிரமாக செயல்பட்டு கட்சிக்கு வெற்றியைத் தேடி தர வேண்டும்” என்றார்.