பாகன் உட்பட இருவரை கொன்ற தெய்வானை யானை - திருச்செந்தூரில் நடந்தது என்ன?
திருச்செந்தூர் கோயில் யானை தெய்வானை மிதித்து பாகனும் அவரது உறவினரும் உயிரிழந்தனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெய்வானை யானை வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த யானையை கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையைச் சேர்ந்த பாகன் உதயகுமார் கவனித்து வந்தார். இந்த நிலையில் உதயகுமாரை காண அவரது உறவினரான ஓய்வு பெற்ற ராணுவ வீரர் சிசுபாலன் வந்துள்ளார். அப்போது சிசுபாலன், யானையின் அருகே நின்று செல்பி எடுத்ததுடன் ‘‘வரட்டுமா’’ என்று யானையின் உடலில் தட்டியதாக கூறப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து ஆக்ரோஷமடைந்த யானை, பாகனின் உறவினரை தாக்கியது. அப்போது தடுக்க வந்ததால் பாகனையும் யானை மிதித்து கொன்றதாக கூறப்படுகிறது.
யானை மிதித்து 2 பேர் இறந்ததால் திருச்செந்தூர் கோயில் நடை 45 நிமிடம் சாத்தப்பட்டது. பின்னர் சாந்தி நிவர்த்தி பூஜைகள் செய்யப்பட்ட நிலையில் பக்தர்கள் மீண்டும் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் யானைக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், பெண் யானை தெய்வானைக்கு மதம் பிடிக்க வாய்ப்பில்லை என வனத்துறை தகவல் தெரிவித்துள்ளது. கோயிலில் 3 நாள் தங்கி யானைக்கு சிகிச்சை தரவும் வனத்துறை முடிவு செய்துள்ளது.