Maharashtra Elections 2024: வாக்குக்கு பணம் கொடுக்க பாஜக முயற்சி? சிக்கிய லட்சங்கள்!

maharashtra-assembly-elections-2024-voting-and-bjp-general-secretary-facing-allegation-of-vote-for-money-nw-azt
  • Publisher : News18 (Ta)
  • Author : -
  • Last Update : 2024-11-19 20:52:00

மகாராஷ்டிரா மாநிலத்தில் வாக்குப் பதிவுக்கு முந்தைய தினமான இன்று (19ம் தேதி) வாக்காளர்களுக்கு பாஜக பணம் கொடுக்க முயன்றதாக அந்த மாநிலத்தில் இருக்கும் கட்சியான பகுஜன் விகாஸ் அகாடி குற்றம்சாட்டியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 தொகுதிகளுக்கும் நாளை (20ம் தேதி) ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள் வரும் 23ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. தேர்தலுக்கான பிரச்சாரங்கள் நேற்று (18ம் தேதி) மாலையுடன் அந்த மாநிலத்தில் நிறைவு பெற்றது.

இந்நிலையில், மும்பையில் இருந்து 60 கி.மீ. தொலைவில் இருக்கும் விரார் எனும் பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில் பாஜகவின் தேசிய தலைவர் வினோத் தாவ்டே வாக்களர்களுக்கு பணம் கொடுக்க பணத்துடன் வந்ததாக பகுஜன் விகாஸ் அகாட்சி கட்சியினர் குற்றம்சாட்டினர்.

மகாராஷ்டிரா மாநிலம், நலசோபரா தொகுதியில் பாஜக சார்பாக ராஜன் நாயக் போட்டியிடுகிறார். இவரும், பாஜக தேசிய செயலாளர் வினோத் தாவ்டே ஆகிய இருவரும் விரார் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் இருந்தனர். அப்போது அங்கு வந்த பகுஜன் விகாஸ் அகாடி கட்சியின் தலைவர் பிரசாந்த் ராவத் அவரது கட்சியினருடன் அந்த ஓட்டலுக்கு சென்றார்.

அதனைத் தொடர்ந்து பாஜகவின் தேசியச் செயலாளர் வினோத் தாவ்டே வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க வந்துள்ளார். அவரிடம் ரூ. 5 கோடி உள்ளது என்று பகிரங்க குற்றச்சாட்டை வைத்தார். அதனைத் தொடர்ந்து அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பிரசாந்த் ராவத் மற்றும் அவரது கட்சியினர் வினோத் தாவ்டேவை மடக்கி அவரிடம் வாக்குவாதத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

அதன்பிறகு அங்கிருந்த ஒரு பையை எடுத்து அதில் இருந்து பண கட்டை தூக்கி பகிரங்கமாக வெளியே காட்டினர். இதற்குள்ளாக இந்தத் தகவல் காவல் துறைக்கும் சென்றுள்ளது. அதேபோல், மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அதிகாரியுமான கோவிந்த் போட்கேவுக்கும் சென்றுள்ளது. இது தொடர்பாக தற்போது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

தற்போது பகுஜன் விகாஸ் அகாடி கட்சியினர், பாஜக தேசியச் செயலாளரிடம் இருந்து பணம் எடுத்து காட்டும் வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகிவருகிறது.

இந்த விவகாரம் குறித்து பேசிய பாஜக தேசியச் செயலாளர் வினோத் தாவ்டே, “நான் இங்கு தேர்தல் தொடர்பாக ஆலோசனை வழங்கவே வந்தேன் பணம் கொடுக்க வரவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

அதேசமயம், பகுஜன் விகாஸ் அகாடி தலைவர் பிரசாந்த் ராவத், “பாஜக தலைவர் ஒருவர் கொடுத்த தகவலின் படி தான் நான் இங்கே வந்தேன். அவர் தான் திவாடே வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க வந்துள்ளார் எனும் தகவல் கொடுத்தார். ஒரு தேசியச் செயலாளர் இப்படியான விஷயங்களை செய்வார் என நான் நம்பவில்லை. ஆனால், இங்கு வந்தபிறகு தான் அது உண்மை என்பது தெரியவந்தது” என்று தெரிவித்தார்.

மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான கோவிந்த் போட்கே, “தேர்தல் ஆணையத்திற்கு இது தொடர்பாக புகார் வந்தது. அதனைத் தொடர்ந்து நலசோபரா பகுதி காவல்துறையினர், இணை போலீஸ் கமிஷனர் மற்றும் இரு துணை போலீஸ் கமிஷனர் ஆகியோர் சம்பந்தப்பட்ட ஓட்டலுக்கு சென்று ஆய்வு செய்தனர். அங்கு ரூ. 9.93 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், சில ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

மகாராஷ்டிராவில் நாளை தேர்தல் நடக்க இருக்கும் சூழலில் இன்று பாஜகவினர் பணம் கொடுக்க முற்பட்டதாக வெளியாகியுள்ள குற்றச்சாட்டும், வீடியோவும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Ads
Recent National News
Trending News
Recent News
Prev
Next