“தமிழ்நாட்டின் முன்னேற்றத்தை தண்டிக்கும் வகையில் வரி பகிர்வு” - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
மத்திய அரசு 16-வது நிதி ஆணையத்தை அரவிந்த் பனகாரியா தலைமையில் அமைத்துள்ளது. ஆணையத்தின் உறுப்பினர்களாக அஜய் நாராயண் ஜா, ஆனி ஜார்ஜ் மேத்யூ, மனோஜ் பாண்டா, சவுமியா காந்தி கோஷ் ஆகியோர் உள்ளனர். இந்நிலையில், இந்த குழுவினர் நேற்று சென்னை வந்தனர். இன்று (திங்கட்கிழமை) தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மாநிலங்களுக்கான நிதிப் பகிர்வை 41 விழுக்காட்டில் இருந்து 50 விழுக்காடாக அதிகரிக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
அதேபோல், மாநில பேரிடர் மேலாண்மை நிதியினை 2026-27 ஆம் ஆண்டு காலகட்டத்தில் 50 சதவீதமாக உயர்த்தி, 90: 10 என்ற அளவில் ஒன்றிய மற்றும் மாநில நிதிப் பங்கீட்டில் வழங்க வேண்டும்.
பரிந்துரை காலத்தில் செயல்படுத்துவதற்கான நிதி அளவுகளில் ஆண்டுக்கு 5 சதவீதம் என்ற அளவிலிருந்து 10 சதவீதம் என்ற அளவில் உயர்த்தப்பட வேண்டும்.
கடற்கரையின் நீளம் மற்றும் நகரமயமாக்கல் போன்ற வரையறை உள்ளிட்ட புதிய குறியீடுகளுடன் பேரிடர் குறியீடுகள் மாற்றி அமைக்கப்பட வேண்டும்.
நகர்ப்புற வெள்ளம் (ரூ.2500 கோடி), வறட்சி நிவாரணம் (ரூ.2000 கோடி) மற்றும் கடலோர மேலாண்மை (ரூ.1000 கோடி) ஆகியவற்றினை மேற்கொள்ள குறிப்பிட்ட நிதியினை தமிழ்நாட்டிற்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும்” என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
மேலும், கடந்த நான்கு ஆண்டுகளில் மத்திய அரசின் மொத்த வரி வருவாயில் 33.16 விழுக்காடு மட்டுமே மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டிருப்பதாகக் கூறினார். அதுமட்டுமின்றி தமிழ்நாட்டின் முன்னேற்றத்தை தண்டிப்பதை போல தற்போதைய வரி பகிர்வு முறை அமைந்துள்ளதாகவும் முதலமைச்சர் குற்றஞ்சாட்டினார்.