டெல்லியில் உச்சகட்டத்தை எட்டிய காற்று மாசுபாடு… பாதிப்பை குறைக்க அரசு தீவிர நடவடிக்கை
தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு மீண்டும் உச்சத்தை எட்டத் தொடங்கியுள்ளது. காற்றின் தரக் குறியீடு (Air Quality Index) இன்றைய நிலவரப்படி 494 புள்ளியாக டெல்லியில் உயர்ந்திருக்கிறது.
இதைத் தொடர்ந்து பாதிப்பை குறைக்க அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. டெல்லியில் கட்டப்பட்டு வரும் அதிகப்படியான கட்டுமானங்கள், அருகே உள்ள குருகிராமத்தில் பெருகியுள்ள நகரமயமாதல் மற்றும் அண்டை மாநிலங்களில் எரிக்கப்படும் விவசாய கழிவுகள் உள்ளிட்டவை காரணமாக டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரித்துள்ளது.
இவற்றை கட்டுக்குள் கொண்டு வர பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் குறிப்பிடத் தகுந்த மாற்றம் ஏதும் ஏற்படவில்லை. தற்போது குளிர்காலம் என்பதால் காற்று மாசுபாடு வழக்கத்தை விட கணிசமாக உயர்ந்துள்ளது. மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் காற்று மாசுகளுக்கு ஒரு தர குறியீட்டை நிர்ணயித்துள்ளது.
இதன்படி காற்று மாசுபாடு 0 முதல் 50 வரையிலான AQI நல்லது, 51 மற்றும் 100 திருப்திகரமானது, 101 மற்றும் 200 மிதமானது, 201 மற்றும் 300 மோசமானது, 301 மற்றும் 400 மிகவும் மோசமானது, 401 மற்றும் 450 கடுமையானது, மற்றும் 450 முதல் 500க்கு மேல் கடுமையானது என கருத வேண்டும்.
தலைநகர் டெல்லியில் இன்று காற்று மாசுபாடு குறியீடு 494 ஆக பதிவாகியுள்ளது. இந்தியாவை பொறுத்த அளவில் முக்கிய நகரங்களில் சர்வதேச நிறுவனங்கள் காற்று மாசுபாட்டை கணக்கிட்டு வருகின்றன. இந்த நிறுவனங்கள் வெளியிட்ட தகவலின் படி காற்று மாசு தரக் குறியீடு 1600 ஆக இருந்ததாக தகவல்கள் வெளிவந்தன.
இருப்பினும் மத்திய அரசுடைய மாசு கட்டுப்பாட்டு வாரிய தர குறியீடான AQI-யை மட்டுமே பொதுமக்கள் கருத்தில் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். டெல்லி என்.சி.ஆர் பகுதியில் மட்டும் 40 நிலையங்களை அமைத்து மாசு காற்று மாசு கணக்கிடப்படுகிறது. இதனை குறைப்பதற்கு சில நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது.
அதாவது டெல்லியில் பதிவு செய்யப்பட்ட பழைய நடுத்தர டீசல் கனரக சரக்கு வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. டெல்லிக்கு வெளியே பதிவு செய்யப்பட்ட அனைத்து லாரிகளும், வணிக வாகனங்களும் அத்தியாவசிய தேவை பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.
அதனை தவிர்த்து மற்ற எந்த சேவைகளை வழங்கும் வாகனங்கள் தலைநகருக்குள் அனுமதிக்கப்படுவதில்லை. பொது மற்றும் தனியார் அலுவலகங்கள் 50% பணியாட்களுடன் இயங்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.
மற்ற பணியாளர்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய பரிந்துரைக்கப்படுகிறார்கள். மேலும் அனைத்து பள்ளிகளும் விடுமுறை அளிக்கப்பட்டு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.