குகி ஆயுத குழுவை சட்டவிரோத அமைப்பாக அறிவிக்க வேண்டும் - மத்திய அரசுக்கு மணிப்பூர் மாநில அரசு கோரிக்கை!
குகி ஆயுத குழுவை சட்டவிரோத அமைப்பாக அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு மணிப்பூர் மாநில அரசு கோரிக்கை விடுத்துள்ளது. ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மணிப்பூரில் குகி பழங்குடியினர் மற்றும் மெய்தி சமூகத்தினருக்கு இடையேயான மோதலால் பதற்றம் நீடித்து வருகிறது. அங்கு சட்டம் - ஒழுங்கை நிலைநாட்ட கூடுதல் படைகளை அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்நிலையில், மணிப்பூர் தலைநகர் இம்பாலில் நேற்று முதலமைச்சர் பிரேன் சிங் தலைமையில் உயர் மட்ட குழு கூட்டம் நடைபெற்றது.
இதில், அமைச்சர்கள் மற்றும் ஆளும் கூட்டணி கட்சி எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்டனர். அப்போது கடந்த 16 ஆம் தேதி அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு ஒருமனதாக ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன்படி, மணிப்பூரில் அமல்படுத்தப்பட்டுள்ள ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
குகி ஆயுத குழுவினருக்கு எதிரான நடவடிக்கைகளை ஒருவாரத்திற்குள் தொடங்க வேண்டும் என்றும், குகி ஆயுத குழுவை சட்டவிரோத அமைப்பாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த கோரிக்கைகள் குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவேற்றப்படாவிட்டால், மாநில மக்களுடன் கலந்தாலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பாஜக கூட்டணிக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.