Jharkhand Elections 2024 Phase 2: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு எப்போது வெளியாகும்?
ஜார்க்கண்ட் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கு சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறுகின்றன. இதில், 81 தொகுதிகள் கொண்ட ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு இரண்டு கட்டங்களாகவும், 288 தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிராவுக்கு ஒரே கட்டமாகவும் தேர்தல் நடக்கிறது.
ஏற்கனவே ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள 43 தொகுதிகளுக்கு கடந்த 13ம் தேதி முதற்கட்ட தேர்தல் முடிந்துள்ள நிலையில், மீதமுள்ள 38 தொகுதிகளுக்கு நாளை (20ம் தேதி) வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. அதேபோல், மகாராஷ்டிராவிலும் நாளை (20ம் தேதி) 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இந்த இரு மாநிலங்களிலும் பதிவாகும் வாக்குகள் 23ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
ஒவ்வொரு தேர்தலிலும் தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பும், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பும் முக்கிய இடங்களை வகிக்கும். கடந்த சில தேர்தல்களாக தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்துக் கணிப்புகள் அவ்வளவு துல்லியமாக இல்லாமலும், சில சமயங்களில் கருத்துக் கணிப்புக்கு மாறான முடிவுகளும் வெளியாகிவருகிறது. இருந்தாலும், மக்களுக்கு கருத்துக் கணிப்பு மீதான ஆவல் இருந்துக்கொண்டே இருக்கும்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் காலை 7 மணிக்குத் துவங்கி மாலை 6 மணிக்கு இரண்டாம் கட்டத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நிறைவடைகிறது. இதனையடுத்து 6.30 மணிக்கு தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிடலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்குப் பதிவு முடிந்து அரை மணி நேரத்திற்கு எந்தக் கருத்துக் கணிப்பும் வெளியாகக் கூடாது என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.