ரூ.9,517 கோடி மதிப்புள்ள மருந்து தயாரிப்பு நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வரும் பெண்! - யார் இவர்?

a-woman-who-successfully-runs-a-pharmaceutical-company-worth-rs9517-crore
  • Publisher : news18
  • Author : -
  • Last Update : 2024-06-30 17:41:00

சொந்தமாக தொழில் தொடங்கி அதில் வெற்றி பெறுவது என்பது அவ்வளவு எளிதானதல்ல. இதற்கு கடுமையான உழைப்பும், அர்ப்பணிப்பு உணர்வும், விடாமுயற்சியும், மன உறுதியும் வேண்டும். எத்தனை தடைகள் வந்தாலும் எதிர்த்து நின்று போராடுவதற்கான தைரியம் இருக்க வேண்டும்.

இன்று கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டி வரும் பல இந்திய தொழிலதிபர்கள் கூட ஆரம்ப காலத்தில் வங்கியிடம் கடன் வாங்கியோ அல்லது நண்பர்களின் உதவியோடும் தான் தங்கள் தொழிலை தொடங்கியிருப்பார்கள். ஆனால் இந்த வாய்ப்புகள் ஒரு சிலருக்கு எளிமையாக கிடைத்துவிடுகின்றன.

இந்தியாவைப் பொறுத்தவரை குடும்ப தொழில்களே கோலோச்சுகின்றன. தந்தையோ, தாத்தாவோ தொடங்கிய நிறுவனத்தை இன்று மகனோ/மகளோ அல்லது பேரனோ/பேத்தியோ தலைமையேற்று நடத்தி வருகிறார்கள். அப்படி தனது தந்தையின் நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்திவரும் ஒருவர் தான் ஜஹாபியா கோரகிவாலா. மல்டிநேஷனல் மருந்தக நிறுவனமான Wockhardt-ன் தலைவரும், நிறுவனருமான ஹபில் கோரகிவாலாவின் மகளே இவர். இந்நிறுவனத்தின் மருத்துவமனை பிரிவை ஜஹாபியா கவனித்துக் கொள்கிறார். தொண்டு நிறுவனத்தை மகன் கவனித்துக் கொள்கிறார்.

Wockhardt மருத்துவமனையின் மேலாண்மை இயக்குனராக இருக்கிறார் ஜஹாபியா. ஜூன் 25ம் தேதி நிலவரப்படி இந்த மருத்துவமனையின் சந்தை மதிப்பு ரூ.9,517 கோடியாகும். இதன் தலைமையகம் மும்பையில் உள்ளது. 2010ம் ஆண்டு தன்னுடைய 27வது வயதில் இந்த மருத்துவமனையின் நிர்வாக இயக்குனராக பதவியேற்றார் ஜஹாபியா. மருத்துவமனையில் செயல் திட்டங்கள், புதிய தொழில் வாய்ப்புகளை கண்டறிவது ஆகிய பொறுப்புகளை ஜஹாபியா கவனித்து வருகிறார்.

ஸ்விட்சர்லாந்து நாட்டில் உள்ள புகழ்பெற்ற ஏக்லான் கல்லூரியில் பள்ளிப் படிப்பை முடித்த ஜஹாபியா, அமெரிக்காவிற்கு சென்று நியூயார்க் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை நிறைவு செய்தார். இது தவிர ஹைதராபாத்தில் உள்ள இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸ் கல்லூரியில் எம்பிஏ பட்டத்தையும் பெற்றுள்ளார். மேலும் RPG லைஃப் சயின்ஸ் நிறுவனத்தின் போர்டு இயக்குனர்களில் ஒருவராகவும் ஜஹாபியா இருந்து வருகிறார்.

ஹவுரங்காபாத்தில் சிபிஎஸ்இ பாட அமைப்பை கொண்ட கிண்டர் கார்டன் முதல் 12-ம் வகுப்பு வரையுள்ள Wockhardt குளோபல் பள்ளியையும் ஜஹாபியா நடத்தி வருகிறார். இதற்கு முன் குடும்பத்தினர்கள் அனைவரும் சில்லறை வணிகத்தில் ஈடுபட்டு வந்தநிலையில், அதிலிருந்து விலகி முதல்முறையாக 1967-ம் ஆண்டு ஜஹாபியாவின் தந்தை Wockhardt நிறுவனத்தை தொடங்கினார்.

பயோ டெக்னாலஜி மற்றும் மருந்து தயாரிக்கும் நிறுவனமான இது, பல உயிர் காக்கும் மருந்துகளை விற்பனை செய்துவருகிறது. இந்நிறுவனத்தின் உற்பத்தி ஆலைகள் இந்தியா, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் உள்ளது. Wockhardt நிறுவனத்தின் ஆண்டு வருமானம் ரூ.2,693 கோடியாகும்.

Trending News
Recent News
Prev
Next