“மரங்களை வளர்த்து பூமித் தாயை பாதுகாக்க வேண்டும்” - மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உருக்கம்!

pm-modi-mann-ki-baat-requested-nurturing-trees-and-save-mother-earth-manadhin-kural
  • Publisher : news18
  • Author : -
  • Last Update : 2024-06-30 15:43:00

மரங்களை வளர்த்து பூமித்தாயை பாதுகாக்க வேண்டும் என்று பிரதமர் மோடி தனது மனதின் குரல் நிகழ்ச்சியில் உருக்கத்துடன் கூறியுள்ளார்.

மக்களவை தேர்தலுக்கு பின்னர் பிரதமர் மோடி முதன் முறையாக மன் கி பாத் எனும் மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, “எனக்குப் பிரியமான நண்பர்களே, உலகின் மிகவும் விலைமதிப்பில்லாத உறவு எது என்று நான் உங்களிடம் வினவினால், நீங்கள் கண்டிப்பாக அம்மா என்றே கூறுவீர்கள்.  நம் அனைவரின் வாழ்க்கையிலும் அம்மாவுக்கான இடம் மிகவும் உயர்வானதாகவே இருக்கும்.   அம்மா அனைத்து துக்கங்களையும் சகித்துக் கொண்டு, தனது மக்களை நன்கு வளர்க்கிறாள்.

ஒவ்வொரு அன்னையும் தனது குழந்தைகளின் மீது அன்பை பொழிகிறாள்.  நம் ஒவ்வொருவரையும் பெற்ற அன்னையின் அன்பு, நம் அனைவரின் மீதும், நாம் என்றுமே திருப்பிச் செலுத்த முடியாத ஒரு கடனைப் போன்றது.  நாம் நமது அன்னையர்க்கு ஏதாவது திரும்பச் செலுத்த முடியுமா என்று நான் எண்ணிப் பார்க்கிறேன் ஆனால், ஏதாவது செய்ய முடியுமா சொல்லுங்கள்?  இந்த எண்ணத்தால் உந்தப்பட்டுத் தான் நான் இந்த ஆண்டு உலக சுற்றுலா தினத்தன்று ஒரு சிறப்பான இயக்கத்தை ஆரம்பித்தேன், இந்த இயக்கத்தின் பெயர் – அன்னையின் பெயரில் ஒரு மரம்.

நானும் கூட என் அன்னையின் பெயரிலே ஒரு மரத்தை நட்டிருக்கிறேன்.   நமது அன்னையரோடு இணைந்து அல்லது அவர்களின் பெயரில் ஒரு மரத்தைக் கண்டிப்பாக நடுங்கள் என்று நாட்டு மக்கள் அனைவரிடத்திலும், உலகின் அனைத்து நாடுகளைச் சேர்ந்தவர்களிடத்திலும் நான் வேண்டுகோள் விடுத்தேன்.   அன்னையின் நினைவாக, அவருக்கு மரியாதை அளிக்கும் விதமாக, இந்த மரம் நடும் இயக்கம் விரைவாக வளர்ந்து வருகிறது என்பதைக் காணும் போது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.

மக்கள் தங்கள் அன்னையோடு இணைந்தோ, அவர்களின் புகைப்படத்தின் முன்பாகவோ மரம் நடும் படங்களை சமூக வலைத்தளங்களில் தரவேற்றி வருகிறார்கள்.  அனைவரும் தங்கள் அன்னைக்காக மரங்களை நட்டுக் கொண்டிருக்கிறார்கள் – அவர்கள் ஏழைகளாகட்டும் செல்வந்தர்களாகட்டும், வேலைக்குச் செல்லும் பெண்களாகட்டும் இல்லத்தரசிகளாகட்டும்.  இந்த இயக்கமானது தங்கள் அன்னையரின்பால் தங்களுடைய அன்பை வெளிப்படுத்தும் சமமான சந்தர்ப்பத்தை அனைவருக்கும் அளிக்கிறது. அவர்கள் தங்களின் படங்களை #Plant4Mother மற்றும் #एक_पेड़_मां_के_नाम என்பதில் தரவேற்றுவதோடு மற்றவர்களுக்கும் ஊக்கமளித்து வருகிறார்கள்.

நண்பர்களே, இந்த இயக்கத்தினால் மேலும் ஒரு ஆதாயம் உண்டு.  பூமித்தாயும் நமது தாய்க்கு நிகராக நம்மை கவனித்துக் கொள்கிறாள்.  பூமித்தாய் தான் நம் அனைவரின் வாழ்க்கைக்கும் ஆதாரம், ஆகையால் நாம் பூமித்தாயைக் கவனித்துக் கொள்ள வேண்டியது நம் அனைவரின் கடமையும் ஆகிறது.   அன்னையின் பெயரில் மரம் நடும் இயக்கத்தால் நமது அன்னை கௌரவப்படுத்தப்படுகிறாள் என்பதோடு, பூமித்தாயும் காக்கப்படுகிறாள்.

கடந்த பத்தாண்டுகளாக, அனைவரின் முயற்சிகளாலும், பாரதத்தில் வரலாறுகாணாத வனப்பகுதி விரிவாக்கம் ஏற்பட்டிருக்கிறது.  அமுதப் பெருவிழாக்காலத்தில், நாடெங்கும் 60,000த்திற்கும் மேற்பட்ட அமுத நீர்நிலைகளும் உருவாக்கப்பட்டிருக்கின்றன.  இப்போது நாம் இதைப் போலவே நமது அன்னையரின் பெயரில் மரம் நடும் இயக்கத்திற்கு மேலும் விரைவு கூட்ட வேண்டும். என்று தெரிவித்துள்ளார்.

Ads
Recent National News
Trending News
Recent News
Prev
Next