‘பலவந்தமாக இந்தி மொழியை திணிக்கிறது மத்திய அரசு’ – LIC இணையதள விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் கண்டனம்
எல்.ஐ.சி. இணையதளம் இந்தி மொழிக்கு மாற்றப்பட்ட விவகாரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், பலவந்தமாக இந்தி மொழியை மத்திய அரசு திணிப்பதாக கூறியுள்ளார்.
அரசு பொதுத்துறை நிறுவனமான லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (LIC)-யின் இணையதள பக்கம் திடீரென முற்றிலுமாக இந்தி மொழிக்கு மாற்றப்பட்டது. ஏராளமான இந்தி பேசாத பொதுமக்கள் இந்த தளத்தை ஆங்கிலத்தில் மூலம் பயன்படுத்தி வந்த நிலையில் திடீரென மாற்றம் செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இணையதள பக்கம் இந்தி மொழியில் இருந்தாலும் மாற்று மொழி தேர்விலும், இந்தி மொழியே இருந்ததால் இணையதளத்தை பயன்படுத்திய இந்தி மொழி அல்லாதவர் சிரமத்திற்கு ஆளாகினர். நாடு முழுவதும் பயன்படுத்தப்படக்கூடிய இந்த இணையதளம் இந்தி மொழிக்கு மாற்றப்பட்டது இந்தி திணிப்பின் ஒரு வகை என விமர்சனங்கள் எழுந்தன.
குறிப்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி, காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை உள்ளிட்ட பலர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கண்டன பதிவில், இந்தி திணிப்பிற்கான பரப்புரை கருவியாக எல்ஐசி இணையதள பக்கம் மாற்றப்பட்டுள்ளது. இது இந்தியாவின் பன்முகத்தன்மையை மதிக்காமல் பலவந்தமாக கலாச்சார மற்றும் மொழியை திணிப்பதை போன்றதாகும். அனைத்து தரப்பு மக்களின் ஆதரவுடன் தான் எல்ஐசி வளர்ந்தது. இந்தி மொழி கொடுங்கோன்மையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். என்று குறிப்பிட்டிருந்தார்.
இவ்வாறு பல்வேறு தரப்பினர் தொடர்ந்து கண்டனம் தெரிவித்த நிலையில், மீண்டும் எல்ஐசி பக்கம் மீண்டும் ஆங்கில மொழிக்கு வந்துள்ளது. இது குறித்து விளக்கம் அளித்துள்ள எல்ஐசி தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த பிரச்சனை ஏற்பட்டதாகவும், இந்த கோளாறு சரி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.