World Cup 2023 | சொல்லி அடித்த கம்மின்ஸ்.. இடிந்து போய் நின்ற இந்திய அணி... இந்த நாளை மறக்க முடியுமா
சொந்த மண்ணில் இந்திய அணியை தோற்கடித்து மைதானத்தில் இருக்கும் ரசிகர்கள் அனைவரையும் அமைதிப்படுத்தி உலகக்கோப்பை வெற்றியை நாங்கள் கொண்டாடுவோம் என்று சூளுரைத்த ஆஸ்திரேலிய அணி கேப்டன் கம்மின்ஸ், “நாங்கள் வாய்ச்சொல் வீரன் மட்டுமல்ல நாங்க செய்யுறத தான் சொல்லுவோம், சொல்லுறத தான் செய்வோம்” என்பது போல் இந்தியாவை வீழ்த்தி 2023 ஒரு நாள் உலகக்கோப்பையை வென்று இன்றுடன் ஒரு வருடம் ஆகிறது.
கடந்த 2023 உலகக்கோப்பை ஒரு நாள் தொடர் இந்தியாவில் ஆரவாரமாக தொடங்கியது. 2011 உலகக்கோப்பைக்கு பின் இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பை என்பதால் மீண்டும் இந்திய அணி தான் சாம்பியன் பட்டம் வெல்லும் என பலர் ஆரம்பத்திலேயே ஆருடம் கணித்தனர். அதே போல் அரை இறுதிக்கு இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகள் தகுதி பெற்றன.
முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை 70 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்று முதல் அணியாக 2023 உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு அடியெடுத்து வைத்தது இந்தியா. மறுபக்கம் ஆஸ்திரேலியா அணி தென்னாப்பிரிக்காவை 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. மிகவும் பரபரப்பாக சென்ற இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்காவின் உலகக்கோப்பை ராசி இந்தப் போட்டியிலும் பிரதிபலித்ததால் ஆஸ்திரேலியா இறுதி போட்டிக்கு முன்னேறியது.
இந்தியா - ஆஸ்திரேலியா மோதிய இறுதிப்போட்டி அகமதாபாத் மைதானத்தில் கடந்தாண்டு இதே நாள் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸை வென்ற ஆஸ்திரேலியா, இந்தியாவை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. ஆரம்பம் முதலே இந்திய அணி ஆஸ்திரேலிய பந்துவீச்சில் தடுமாறியது. அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 107 பந்துகளை சந்தித்து 66 ரன்களும் கோலி 54 ரன்களும் எடுத்தனர். இறுதியாக இந்திய அணி 50 ஒவர்கள் முடிவில் 10 விக்கெட்களை இழந்து 240 ரன்கள் எடுத்தது.
இந்திய அணி குறைவான ரன்கள் சேர்த்த போதும் பும்ரா, ஷமி, சிராஜின் வேகம் கைக்கொடுக்கும் என்று ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்தனர். ஆனால் ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட்டின் அதிரடி இந்திய அணியின் உலகக்கோப்பை கனவை தகர்த்தது. லியாவின் டிராவிஸ் ஹெட்டின் அசத்தலான சதத்தால் அந்த அணி கோப்பையை தட்டிச் சென்றது. 140 கோடி இந்தியர்களின் இதயமும் உடைந்து நொறுங்க வீரர்களும் கவலை தோய்ந்த முகத்துடன் மைதானத்தில் இருந்து வெளியேறிய காட்சி இன்றும் அனைவரின் கண் முன்னும் நிழலாடுகிறது.