IND vs AUS : பார்டர் – கவாஸ்கர் டிராபியில் களமிறங்கும் இளம் வீரர்… வியூகத்தை மாற்றிய இந்திய அணி…
இந்திய அணி ஆஸ்திரேலியால் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் -கவாஸ்கர் டிராபி தொடரில் விளையாடுகிறது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் முதல் போட்டி பெர்த் நகரில் நவம்பர் 22ஆம் தேதி தொடங்க உள்ளது.
இந்திய அணி சுமார் 2 மாத காலம் ஆஸ்திரேலியாவில் தங்கி இருக்கும். மொத்தம் 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி குறைந்தது 4 போட்டிகளில் வெற்றி பெற்று ஒரு போட்டியை டிரா செய்தால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க முடியும். ஒரு வேளை தொடரை இழந்தாலோ மிக குறைந்த போட்டிகளில் வெற்றி பெற்றாலோ இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்படும்.
அதன்பின்னர் மற்ற அணிகளின் வெற்றி தோல்வியை கவனத்தில் கொண்டு இந்திய அணி ஒருவேளை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாடலாம் அல்லது வெளியேறலாம். தற்போது இந்திய அணியின் கவனம் முழுவதும் பார்டர் கவாஸ்கர் கோப்பையை வெல்ல வேண்டும் என்பதில்தான் உள்ளது. இருப்பினும் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதல் போட்டியில் விளையாட மாட்டார் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன.
மேலும் முக்கிய ஆட்டக்காரர்கள் காயம் அடைந்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் தற்காலிக கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கும் ஜஸ்பிரித் பும்ரா ஆடும் 11 வீரர்களை தேர்வு செய்வதில் சவாலை எதிர் கொள்வார். இந்திய அணியில் கே.எல். ராகுல் இடம் பெறுவார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இளம் வீரரான தேவ்தத் படிக்கல்லை பேக்அப் ஆட்டக்காரராக இந்திய அணி நிர்வாகம் தேர்வு செய்துள்ளது.
ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா ஏ அணியில் படிக்கல் இடம் பெற்றுள்ளார். கடந்த 20 நாட்களாக அவர் ஆஸ்திரேலியாவில் இருக்கிறார். இதன் அடிப்படையில் அவரை பேக்கப் பிளேயராக இந்திய அணி தேர்வு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
முன்னணி வீரராக மாறி உள்ள சுப்மன் கில்லுக்கு இடது கட்டை விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறது. இதனால் அவர் முதல் டெஸ்டில் விளையாட மாட்டார். மேலும் இரண்டாவது குழந்தைக்கு தந்தையாகியுள்ள ரோஹித் சர்மா இந்தியாவில் இருப்பதால் அவர் முதல் போட்டியில் விளையாடுவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன. ஏனென்றால் அவர் டெஸ்ட் போட்டிக்கான பயிற்சியில் இதுவரை ஈடுபடவில்லை.
இத்தகைய ஒரு சூழலில் இந்திய அணி வரும் வெள்ளி அன்று ஆஸ்திரேலியாவை தனது முதல் போட்டியில் எதிர்கொள்கிறது.
இதற்கிடையே காயத்திலிருந்து குணமடைந்துள்ள முன்னணி வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமியை ஆஸ்திரேலியாவுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அனுப்பாது என்று தகவல்கள் வெளிவந்துள்ளன. இன்னும் சில உள்ளூர் போட்டிகளில் அவர் விளையாட வேண்டும் என்று அணி நிர்வாகம் எதிர்பார்க்கிறது.