அசாம் டூ திருச்செந்தூர்... தெய்வானை யானைக்கு மன அழுத்தமா? - விளக்கும் விலங்கு ஆர்வலர்!
திருச்செந்தூரில் பாகன் உட்பட இருவரை மிதித்து கொன்ற யானை தெய்வானை, ஏற்கனவே மன அழுத்தத்தில் இருந்த தகவல் வெளியாகியுள்ளது.
17 வயதாகும் தெய்வானை அசாமைச் சேர்ந்தது. அதற்கு முதலில் வைக்கப்பட்ட பெயர் பிரிரோனா. திருச்சி சமயபுரத்தை சேர்ந்த சுகுமாரன் என்பவர், அசாமை சேர்ந்த லீலாபோரா என்பவரிடமிருந்து இந்த யானையை வாங்கியிருக்கிறார். அவரிடமிருந்து 2006ம் ஆண்டு திருச்செந்தூர் கோவில் அறங்காவலர் குழு தலைவராக இருந்த தேவதாச சுந்தரம் விலை கொடுத்து வாங்கி திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வழங்கினார்.
அப்போதுதான் பிரிரோனா என்கிற பெயர் தெய்வானை என்று மாற்றம் செய்யப்பட்டது. அப்போது தெய்வானைக்கு வயது 6.
அதன்பின் திருச்செந்தூரில் இருந்து தெய்வானையை திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு அனுப்பி வைத்தனர். அங்கு காவடி காளிதாஸ் என்பவரை தெய்வானை கொன்றதாகக் கூறப்படுகிறது.
அதன்பின் மன அழுத்தத்தில் இருந்த தெய்வானை திருச்சி எம்.ஆர்.பாளையம் யானைகள் பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கிருந்த போது சரண் என்பரை தூக்கி வீசி தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதனால் மீண்டும் அசாமிற்கே அனுப்பி வைத்துவிடும்படி அசாம் அரசு கேட்டது. முறையாக பராமரிக்கப்படும் என தமிழகம் சார்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டதையடுத்து தெய்வானை திருச்செந்தூர் கோயிலுக்கே மீண்டும் வந்துள்ள நிலையில் பாகன் உட்பட இருவரை கொன்றுள்ளது.
மதம் பிடித்திருந்ததா?
தெய்வானை யானைக்கு மதம் பிடித்திருக்காது என்றும் மன அழுத்தமாக இருக்கும் என்றும் ஓசை அமைப்பைச் சேர்ந்த காளிதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள வனவிலங்கு ஆர்வலர் காளிதாஸ், “யானைகள் காட்டு விலங்கு” என்றும் அதை நமக்கு மத்தியில் வளர்த்து நமது ஆசைகளை அதன் மீது திணிப்பதாகக் கூறியுள்ளார்.
“வளர்ப்பு யானைகளாக இருந்தால் அவை பூனை, நாய் போல் இல்லாமல் காட்டுத்தன்மையுடனே இருக்கும்” என்றும் காளிதாஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
திருச்செந்தூர் யானையைப் பொருத்தவரை அதற்கு மதம் பிடித்திருக்க வாய்ப்பில்லை என்றும் காளிதாஸ் உறுதிபடக் கூறியுள்ளார். ஐந்தாறு யானைகளுக்காக அரசு புத்துணர்வு முகாம்கள் அமைக்கலாம் என்றும் ஆலோசனை தெரிவித்தார்.