“2026 தேர்தலில் சண்டை செய்யணும்” - ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கு ரஞ்சித் ஆதரவு

we-must-all-work-together-on-the-ground-to-field-armstrong-wife-as-the-thiruvallur-constituency-candidate-and-make-him-win-nw-azt
  • Publisher : News18 (Ta)
  • Author : -
  • Last Update : 2024-11-17 21:21:00

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை 5-ம் தேதி பெரம்பூரில் உள்ள தனது வீட்டின் அருகே பயங்கரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பான விசாரணை நடைபெற்றுவருகிறது.

இதற்கிடையில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக ஆனந்தனும், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடியும் நியமிக்கப்பட்டனர்.

இந்நிலையில், எழுத்தாளர் முத்துகிருஷ்ணன் எழுதிய ‘காலம் தந்த தலைவர் ஆம்ஸ்ட்ராங்’ என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். இந்தப் புத்தக வெளியீட்டு விழா சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் இயக்குநர்கள் பா. ரஞ்சித், வெற்றிமாறன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த நூலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு வெளியிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் பா.ரஞ்சித், “ஆம்ஸ்ட்ராங் கொலையில் பல உண்மைகள் மறைந்திருக்கின்றன. அதை வெளியே கொண்டுவர வேண்டிய தேவை இருக்கிறது. இரண்டு ரவுடி கும்பலின் மோதல் என்று பலர் பேசுகிறார்கள். ஆனால், அது உண்மை இல்லை.

ஆம்ஸ்ட்ராங் எப்படிப்பட்ட தலைவர் என்பதை எல்லோருக்கும் சொல்ல வேண்டிய தேவை இருக்கிறது. இந்த விவகாரத்தில் திமுக அரசை கடுமையாகக் கண்டித்து கேள்விகளை எழுப்புவதாகப் பலரும் கூறுகின்றனர். திமுக மற்றும் அதிமுக என எந்த அரசாக இருந்தாலும், எங்கள் உரிமைகளை, கேள்விகளை நாங்கள் கேட்போம்.

பகுஜன் சமாஜ் கட்சி வரும் 2026 தேர்தலில் திட்டமிட்டு செயல்பட வேண்டும். இது அவருக்கு செய்யும் மரியாதை. இதற்காக அவரது மனைவி திருமதி. ஆம்ஸ்ட்ராங்கை திருவள்ளூர் தொகுதி வேட்பாளராக நிறுத்தி அவரை வெற்றிபெற வைக்க நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து களத்தில் உழைக்க வேண்டும். அரசியல் அதிகாரத்தைப் பெறுவது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நான் நம்புகிறேன்.

ஜெயிக்கிறோமோ, தோல்வி அடைகிறோமோ அது முக்கியமில்லை. சண்டை செய்ய வேண்டும். அதுதான் முக்கியம். அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும். வட தமிழகத்தில் தனித்து நின்று வெற்றி பெற்ற வரலாறு நமக்கு உண்டு. அதை மீண்டும் நிரூபித்துக் காட்டுவோம்” என்று பேசினார்.

Ads
Recent All News News
Trending News
Recent News
Prev
Next