தமிழ்நாட்டில் சம்பா சாகுபடி காப்பீட்டிற்கான காலக்கெடு நீட்டிப்பு
தமிழ்நாட்டில் சம்பா பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகள் காப்பீடு செய்வதற்கான காலக்கெடு நீடிக்கப்பட்டுள்ளது.
பிரதமரின் ஃபசல் பீமா யோஜனா (PMFBY) திட்டத்தின் கீழ் இரண்டாம் போக நெல் சாகுபடிக்காக காப்பீடு செய்வதற்கான காலக்கெடு கடந்த 14-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. நவம்பர் 14-ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் 6 லட்சத்து 60 ஆயிரம் விவசாயிகள் மட்டுமே பயிர் காப்பீடு செய்திருந்தனர்.
இந்நிலையில், காப்பீட்டிற்கு பதிவு செய்வதற்கான காலக்கெடுவை நீட்டிக்கக்கோரி தமிழ்நாடு வேளாண் துறை தரப்பில் மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டது. அதில், தமிழ்நாட்டில், வடகிழக்கு பருவமழை தாமதமனாதாலும், நீர்தேக்கங்களில் தண்ணீர் குறைவாக இருப்பதாலும், சம்பா சாகுபடி செய்வது தாமதமாகியிருப்பதால் பயிர் காப்பீடு செய்வதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது. இதை ஏற்றுக்கொண்ட மத்திய வேளாண் அமைச்சகம், பயிர் காப்பீடு செய்வதற்கான காலக்கெடுவை, வரும் 30-ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு கூடுதல் முயற்சி எடுத்து, அதிக விவசாயிகளை காப்பீட்டு திட்டத்தில் இணைக்க வேண்டும் எனவும் மத்திய வேளாண் அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.