2026 தேர்தலில் விஜய் இந்தத் தொகுதியில் தான் போட்டி! தவெக நிர்வாகி தகவல்
தமிழ்நாட்டில் 2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான பணிகளை தற்போது ஒவ்வொரு அரசியல் கட்சியும் துவங்கிவிட்டன. முதல் முறையாக ஒரு வித்தியாசமான அரசியல் கள சூழலில் இந்தத் தேர்தல் நடைபெறவுள்ளது என்றே சொல்லலாம்.
தமிழ்நாட்டில் இதுவரை அரசியல் ஆளுமைகளாக இருந்த அதிமுகவின் முன்னாள் பொதுச்செயலாளர் ஜெயலலிதாவும், திமுகவின் முன்னாள் தலைவர் கருணாநிதியும் இறந்தபிறகு 2021ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி நடைபெற்றது. அதேசமயம், திமுக வலுவான கூட்டணியை அமைத்து 2021ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை வென்றது.
2021ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை வென்றதன் மூலம் முதல்முறையாக மு.க.ஸ்டாலின் முதலமைச்சரானார். தற்போது கடந்த மூன்றரை வருடங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி எப்படி நடக்கிறது என்பதையும் மக்கள் பார்த்துள்ளனர். அதேபோல் மீதமிருக்கும் ஒன்றரை வருட கால ஆட்சியையும் மக்கள் பார்க்க இருக்கின்றனர். எனவே ஜெயலலிதா, கலைஞர் கருணாநிதி தலைமையிலான ஆட்சி இல்லாமல், எடப்பாடி பழனிசாமி, மு.க. ஸ்டாலின் தலைமையிலான ஆட்சிகளை மக்கள் பார்த்துள்ளனர். இருவரின் நேரடி முதல்வர் செயல்பாடுகளை வைத்து இந்தமுறை மக்கள் தேர்தலில் வாக்களிக்க உள்ளனர்.
இது இந்தத் தேர்தலில் புதியது என்றால், அடுத்ததாக தவெகவின் வருகையும் கவனிக்கத்தக்கதாக உள்ளது. நடிகர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலை கணக்கிட்டு, கடந்த சில வருடங்களாக இயங்கி வருகிறார். நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக தனது அரசியல் வருகையை அறிவித்த அவர், அதன்பிறகு தனது கட்சியை பதிவு செய்வது, கட்சியின் முதல் மாநில மாநாட்டை நடத்தியது. அதில், தனது கொள்கைகளை அறிவித்தது என தமிழ்நாட்டு அரசியலின் லைம் லைட்டிற்குள் வந்துள்ளார்.
கடந்த சில காலங்களாக திமுக, அதிமுக என இருமுனைப் போட்டியை தமிழ்நாடு அரசியல் களம் சந்தித்துவரும் நிலையில், இடையில் சீமானின் நாம் தமிழர் கட்சி மூன்றாவது முனையாக வந்தது. தற்போது விஜயின் தவெக நான்காவது முனையாக வந்துள்ளது. இன்னும் சில கட்சிகள் கூட்டணியாகவோ அல்லது தனித்து நின்று ஐந்து முனைப் போட்டியை ஏற்படுத்தினாலும், அரசியலும் வாக்குகளும் இந்த நான்கு முனையை சுற்றியே நடக்க இருக்கிறது.
இப்படியான சூழலில் தர்மபுரி மாவட்ட தவெக வழக்கறிஞர் அணி பிரிவு ஆலோசனைக் கூட்டம் இன்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் பேசிய தவெக தர்மபுரி மாவட்டத் தலைவர் சிவா, “2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டமன்றத் தொகுதிகளில் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிடுவார்” என பேசியுள்ளார்.