‘வாழு... வாழ விடு’ - தனுஷ் பேசிய வார்த்தைகளை வைத்தே விக்னேஷ் சிவன் வெளியிட்ட பதிவு!
விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் திருமண ஆவணப்படம் நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ள நிலையில், அதில் நானும் ரவுடி தான் பாடலை பயன்படுத்தியதற்காக தனுஷ் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இதற்கு எதிராக தனுஷ் மீது பல அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை தெரிவித்து நயன்தாரா அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், தற்போது விக்னேஷ் சிவன் அது தொடர்பாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் திருமண டாக்குமென்ட்ரி நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ள நிலையில், அதில் ‘நானும் ரவுடி தான்’ திரைப்பட பாடலை பயன்படுத்தியதற்காக நடிகர் தனுஷ் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். தனுஷின் இந்த செயலுக்கு அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை நயன்தாரா முன்வைத்துள்ளார். இது தொடர்பாக நடிகை நயன்தாரா இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள கடிதத்தில், “உங்களைப்போல் அப்பா, அண்ணன் என குடும்ப பின்னணி வைத்து நான் சினிமாவுக்கு வரவில்லை. என் மீதும் தனது கணவர் விக்னேஷ் சிவன் மீதும் தனுஷ் பழிவாங்கும் நோக்கில் செயல்படுவதாக பகிரங்க புகார் கூறினார்.
சமீபத்தில் வெளியான Nayanthara Beyond the fairy Tale டிரைலரின் பயன்படுத்தப்பட்டிருக்கும் 3 விநாடி வீடியோவிற்கு எதிராக நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
ஏற்கனவே இணையதளங்களில் பகிரப்பட்ட ஒரு காட்சிக்கு ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்டு இருப்பது மிகவும் விநோதமானதாக இருக்கிறது. கீழ்த்தரமான இந்த செயல், ஒரு மனிதராக நீங்கள் எப்படிபட்டவர் என்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
மேடைகளில் உங்கள் அப்பாவி ரசிகர்கள் முன் பேசுவதைப் போல், ஒரு சதவீதம் கூட உங்களால் நடந்துகொள்ள முடியாது என்பதை நானும், எனது கணவரும் நன்றாகவே அறிந்திருக்கிறோம்” என்று காட்டமாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இதே விவகாரத்தை முன்வைத்து இயக்குநர் விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
விக்னேஷ் சிவன் பதிவிட்டுள்ள அந்த வீடியோவில், தனுஷ் ஒருமுறை ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சி ஒன்றில் ‘வாழுங்க… வாழ விடுங்க’ என பேசியதும், அன்பை பரப்புவதும் இடம்பெற்றுள்ளது. அதோடு தனுஷ் ரூ.10 கோடி கேட்டு அனுப்பிய நோட்டீஸும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.
இதனுடன், “வாழு… வாழ விடு. அன்பை பரப்புங்கள். ஓம் நம சிவாய. இதையெல்லாம் நம்பும் உண்மையான ரசிகர்களுக்காகவும், அடுத்தவரின் சந்தோஷத்தில் மகிழ்ச்சி காணும் வகையில் மாற வேண்டும் என இறைவனை வேண்டிக் கொள்கிறேன்” என விக்னேஷ் சிவன் அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.