துப்பாக்கி படத்தில் நடிக்க ஏஆர் முருகதாசின் முதல் தேர்வு விஜய் இல்லை.. அப்போ எந்த நடிகர் தெரியுமா?
தமிழ் சினிமாவில் முன்னணி இடத்தில் இருக்கும் பிரபல இயக்குநர்களில் ஒருவர் ஏ.ஆர். முருகதாஸ். 2001ம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான ‘தீனா’ படத்தை இயக்கியதன் மூலம் இயக்குநராக களமிறங்கினார். முதல் படத்தின் வெற்றியை தொடர்ந்து ரமணா, கஜினி, 7ம் அறிவு, துப்பாக்கி, தர்பார், சர்க்கார் என அடுத்தடுத்து படங்களை இயக்கி வருகிறார். இவரது இயக்கத்தில் வெளியான பல படங்கள் மக்களின் மாபெரும் வரவேற்பை பெற்று கோடிகளில் வசூலை ஈட்டி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த படங்கள். தமிழில் இவர் இயக்கி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த கஜினி திரைப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு அங்கு பெரிய அளவில் ஹிட் அடித்து வசூல் சாதனை படைத்தது. தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு மொழிகளிலும் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸுக்கு மவுசு அதிகம்.
பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய ஏ.ஆர். முருகதாசின் ஒரு அதிரடி படைப்புதான் ‘துப்பாக்கி’ திரைப்படம். 2012ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான இந்த படத்தில் காஜல் அகர்வால், ஜெயராம், வித்யுத் ஜாம்வால், சத்யன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ராணுவ வீரன் வாழ்க்கை, ஸ்லீப்பர் செல்ஸ், ஆக்ஷன் காட்சிகள் என விறுவிறுப்பான கதைக்களத்துடன் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மாஸ் ஹிட் அடித்தது. விஜயின் நடிப்பு பலரின் பாராட்டையும் பெற்றது. ரூ. 60 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் ரூ. 129 கோடி வரை வசூல் செய்து மாபெரும் வெற்றி பெற்றது. விஜய் நடிப்பில் ரூ. 100 கோடி வசூல் தாண்டிய முதல் படம் துப்பாக்கி என்பது குறிப்பிடத்தக்கது.
பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த இந்த படத்தின் ஹீரோ கதாபாத்திரத்தில் நடிக்க ஏ.ஆர். முருகதாசின் முதல் தேர்வு விஜய் இல்லை என்ற செய்திதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் பேசிய காணொளி ஒன்று வைரலாகி வருகிறது. அதில் பேசிய அவர் கூறுகையில், ‘துப்பாக்கி படத்தை முதலில் இந்தி மொழியில் எடுக்கத்தான் திட்டமிட்டிருந்தேன், அதன்படி படத்தில் நடிக்க அக்ஷய் குமாரிடம் படத்தின் முதல் பாதி கதையயை கூறினேன், இரண்டாம் பாதியில் இவ்வாறெல்லாம் வரும் என்று கூறினேன். அதை கேட்ட அவர் நடிக்க ஒப்புக்கொண்டு ஒப்பந்தமும் கையெழுத்தானது. அதன் பின் அவர் இந்தி படங்களில் நடித்து வந்தார்.
அந்த சமயத்தில் விஜயின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் எனக்கு போன் செய்து, ‘விஜய் மணிரத்னம் படம் ஒன்றில் நடிப்பதாக இருந்தது ஆனால் எதிர்பாராத விதமாக அந்த படம் கைவிடப்பட்டது. இப்போது விஜயிடம் டேட் இருக்கிறது உங்களிடம் கதை இருந்தால் அழைக்கலாம்’ என்றார். அப்போது 7ம் அறிவு படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் இருந்தது. இந்தி படத்தில் அக்ஷய் குமார் நடித்துக் கொண்டிருந்ததால் துப்பாக்கி படப்பிடிப்பு தள்ளிப்போனது. அப்போது நான் அக்ஷய் குமாரிடம் போன் செய்து, ‘சார் படம் தாமதமாகிறது, நான் முதலில் இந்த படத்தை தமிழில் எடுத்துவிடுகிறேன், இங்கு பிளாக் பஸ்டர் ஆன படத்தை நீங்கள் இந்தியில் நடித்தால் அது படத்திற்கு ப்ளஸாக இருக்கும்’ என்று கூறியதாக ஏ.ஆர். முருகதாஸ் அந்த வீடியோவில் கூறியிருந்தார்.