Exclusive | "எதுவாக இருந்தாலும் நடிகர் தனுஷ் பதிலளிப்பார்" - நயன்தாரா குற்றச்சாட்டு குறித்து வழக்கறிஞர் சொன்னது என்ன?
நயன்தாரா குற்றச்சாட்டுகள் குறித்து நடிகர் தனுஷ் பதிலளிப்பார் என்று அவரது வழக்கறிஞர் அருண் தெரிவித்துள்ளார்.
விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் திருமண ஆவணப்படம் நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ள நிலையில், அதில் ‘நானும் ரவுடிதான்’ படக் காட்சிகள் மற்றும் பாடலைப் பயன்படுத்த ரூ.10 கோடி கேட்டு நடிகர் தனுஷ் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதற்கு எதிராக தனுஷ் மீது பல அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளைத் தெரிவித்து நயன்தாரா அறிக்கை வெளியிட்டது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அறிக்கையில், “உங்களைப் போல் அப்பா, அண்ணன் என குடும்ப பின்னணி வைத்து நான் சினிமாவுக்கு வரவில்லை. என் மீதும் தனது கணவர் விக்னேஷ் சிவன் மீதும் தனுஷ் பழிவாங்கும் நோக்கில் செயல்படுவதாக” நயன்தாரா பகிரங்க புகார் கூறினார்.
மேலும், “ஏற்கனவே இணையதளங்களில் பகிரப்பட்ட ஒரு காட்சிக்கு ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்டு இருப்பது மிகவும் விநோதமானதாக இருக்கிறது. கீழ்த்தரமான இந்த செயல், ஒரு மனிதராக நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது” என்றும் தனுஷை விமர்சித்திருந்தார் நயன்தாரா.
இந்த நிலையில், நயன்தாரா குற்றச்சாட்டுகள் குறித்து நடிகர் தனுஷ் பதிலளிப்பார் என்று அவரது வழக்கறிஞர் அருண் தெரிவித்துள்ளார்.
நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு வழக்கறிஞர் அருண் அளித்த தகவலில், “இதற்கு மேல் எந்த விஷயம் ஆனாலும் தனுஷே முடிவெடுத்து பதிலளிப்பார். எதுவாக இருந்தாலும் தனுஷ் அறிவிப்பார்.” என்று கூறியுள்ளார்.