ஆண்டு முழுவதும் மாம்பழங்களை விளைவிக்கும் விவசாயி... பீகாரின் தார்பங்காவில் அதிசயம்

agriculture-a-year-round-mango-farmer-in-bihar
  • Publisher : news18
  • Author : -
  • Last Update : 2024-07-20 19:12:00

அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய பழங்களில் ஒன்றாக மாம்பழம் உள்ளது. ஆண்டு முழுவதும் மாம்பழம் கிடைக்க வேண்டுமென நாம் அனைவரும் விரும்பினாலும், இதுவொரு பருவ கால பழமாகும். பெரும்பாலும் கோடைக்காலமே மாம்பழ சீசனாகும். ஆனால் பீகாரில் உள்ள தார்பங்கா நகரத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர், தனது பழத்தோட்டத்தில் பலவிதமான மா மரங்களை வளர்த்து வருகிறார். இவை ஆண்டு முழுவதும் விளைச்சலைத் தருகின்றன.

இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், ஒரே நேரத்தில் பூக்கள், காய்கள் மற்றும் பழுத்த மாம்பழங்களையும் இந்த மரங்கள் தருகின்றன. அவரது தோட்டத்தில் இதுபோன்று டஜன் கணக்கான மரங்கள் உள்ளன. வருடம் முழுவதும் காய்க்கும் இது போன்ற மா மரங்களை நீங்கள் எங்குமே பார்த்திருக்க வாய்ப்பில்லை. பொதுவாக மாமரங்கள் கோடைக்காலத்தில் வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே காய்க்கும். ஆனால் இங்கு ஒவ்வொரு பருவத்திலும் மாம்பழங்கள் தாராளமாக கிடைக்கின்றன.

இங்கு நாம் பேசிக் கொண்டிருக்கும் பழத்தோட்டம் அகிலேஷ் சவுத்ரி என்ற நபருக்கு சொந்தமானது. இவர் தனது பழத்தோட்டத்தில் ஆண்டு முழுவதும் பழங்களைத் தரும் டஜன் கணக்கான மரங்களை வளர்த்து வருகிறார். யாருடைய உதவியும் இல்லாமல் தனி ஆளாக இந்த தோட்டத்தை கவனித்துக்கொள்கிறார். அதோடு கடினமாக உழைத்து மரங்களை பராமரித்து வருகிறார்.

“சில மாதங்களைத் தவிர, ஆண்டின் அனைத்து சீசனிலும் என்னுடைய தோட்டத்தில் மாம்பழங்கள் கிடைக்கும். அந்த குறிப்பிட்ட மாதங்களில் மட்டும் மாம்பழங்கள் காய் பருவத்தில் இருக்கும். மாம்பழங்கள் பழுத்தவுடன் உடனடியாக மரங்கள் பூக்கத் தொடங்கிவிடும்” என்று நியூஸ்18 சேனலுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியுள்ளார். இந்த சுழற்சி எந்த தடையுமின்றி தொடர்வதால் ஆண்டு முழுவதும் மாம்பழம் கிடைப்பதை உறுதி செய்கிறது.

அகிலேஷின் பழத்தோட்டத்தில் கிடைக்கும் பல்வேறு வகையான மாம்பழங்கள் மக்களை வியப்பில் ஆழ்த்துகின்றன. “இங்கு விளையும் மாம்பழங்கள் சுவையில் மிகவும் இனிமையானவை. அதன் காரணமாக மக்கள் பெரும்பாலும் அவற்றை விரும்புகிறார்கள். இந்த மரங்களின் தனிச்சிறப்பு என்னவென்றால், ஒரு மரத்தில் ஒரே நேரத்தில் பூக்களையும், காய்களையும் பழுத்த மாம்பழங்களையும் காணலாம். அதன் காரணமாகவே இம்மரங்களை மக்கள் அடிக்கடி பார்த்து வியந்து போவார்கள். இந்த மரங்கள் முசாபர்பூரில் இருந்து கொண்டுவரப்பட்டது” என்று விவசாயி கூறியுள்ளார்.

ஒவ்வொரு மாம்பழமும் எவ்வளவு எடை இருக்கும் என அவரிடம் கேட்டபோது, ​​"அனைத்து மாம்பழங்களும் சுமார் 500 கிராம் அல்லது அதற்கும் அதிகமாகவே இருக்கும். இங்கு நீங்கள் பார்க்கும் பழங்கள் எதுவும் 500 கிராம் எடைக்கு குறைவாக இருக்காது" என்றார். ஆண்டில் எந்நேரமும் இங்கு மாம்பழம் கிடைக்கும் என்பதால் இந்த வகை மாம்பழங்கள் ஆயிரக்கணக்கான மக்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறது.

Trending News
Recent News
Prev
Next