தமிழ்நாடு பாடத் திட்டம் தான் நாட்டிலேயே சிறந்தது - ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அமைச்சர் உதயநிதி பதிலடி!

tamilnadu-sylabus-is-best-in-india-says-minister-udhayanidhi-stalin
  • Publisher : news18
  • Author : -
  • Last Update : 2024-09-05 18:07:00

மாநில பாடத்திட்டத்தின் தரம் குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சித்திருந்த நிலையில், நாட்டிலேயே சிறந்தது தமிழ்நாடு பாடத்திட்டம்தான் என்று அமைச்சர் உதயநிதி பதிலளித்துள்ளார்.

மத்திய பாடத்திட்டத்தைவிட மாநில பாடத்திட்டத்தின் தரம் குறைவாக உள்ளதாக ஆளுநர் ஆர்என் ரவி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், மறைமலைநகரில் நடந்த திருமண நிகழ்ச்சியில் உரையாற்றிய அமைச்சர் உதயநிதி, தமிழ்நாடு அரசின் பள்ளிப்பாடத்திடம் சரியில்லை என்று சிலர் புரளி கிளப்பி வருவதாக குற்றஞ்சாட்டினார். மயில்சாமி அண்ணாதுரை, வீரமுத்துவேல் போன்றே இஸ்ரோ விஞ்ஞானிகள், தமிழநாடு அரசு பள்ளியில் படித்து உயர்பதவியில் உள்ளதாக கூறினார்.

உலகில் தலைச்சிறந்த மருத்துவர்கள் தமிழ்நாடு அரசுப்பள்ளியில் படித்தவர்கள் என்றும் இதை பொருத்துக்கொள்ள முடியாமல் சிலர் வயித்தெறிச்சலில் குறைகூறுவதாகவும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் எண்ணி துணிக என்ற பெயரில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடினார். அப்போது, மத்திய அரசின் பிஎம்ஸ்ரீ திட்டம், நல்ல முன்னெடுப்பு என்றும் பள்ளிகளின் உட்கட்டமைப்பு, கற்றல் திறன் உள்ளிட்டவை மேம்படும் என்றும் கூறினார்.

தொடர்ந்து பேசிய ஆளுநர், தமிழ்நாட்டில் 60 சதவிகிதம் பேர், அரசு பள்ளிகளில் பயிலும் நிலையில், கற்பித்தல் தரம் தேசிய சராசரியை விட மிகக் குறைவாக உள்ளதாக கூறினார். உயர் நிலைப் பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களால் இரண்டு இலக்கு எண்களைக் கூட படிக்க முடியாத நிலை உள்ளது என்றும் 75 சதவிகித மாணவர்களுக்கு இரண்டு இலக்கு எண்கள் தெரியவில்லை என்றும் கூறினார். அதேபோல் 40 சதவிகித மாணவர்களுக்கு இரண்டாம் வகுப்பு பாட புத்தகத்தை கூட படிக்க தெரியவில்லை என்றார்.

இந்த சூழலில் அனைவரையும் தேர்ச்சி அடைய வைப்பதால் அரசு பள்ளிகள் மாநிலத்திற்கும், நாட்டிற்கும் ஆபத்தை உருவாக்குவதாகவும் ஆளுநர் குற்றம்சாட்டினார். இதற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.

Trending News
Recent News
Prev
Next