அரசுப் பள்ளிகளில் ஆன்மீக சொற்பொழிவா? - இணையத்தில் கேள்வி எழுப்பும் நெட்டிசன்கள்!

spiritual-discourse-in-government-schools
  • Publisher : news18
  • Author : -
  • Last Update : 2024-09-06 08:47:00

சென்னையில் அரசுப் பள்ளியில் ஆன்மீகச் சொற்பொழிவு நடைபெற்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அரசுப் பள்ளியில் ஆன்மீகச் சொற்பொழிவா என பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு இணையத்தில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

சென்னை அசோக் நகரில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த பள்ளி மாணவிகளுக்கு ஊக்கமளிக்க பரம்பொருள் அறக்கட்டளை என்ற அமைப்பைத் தொடங்கி, இயங்கி வரும் மகாவிஷ்ணு என்பவர் சிறப்பு பேச்சாளராக அழைக்கப்பட்டார்.

இதையடுத்து, அசோக் நகர் அரசுப் பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் மத்தியில் பேசத் தொடங்கிய இவர், “மந்திரத்தை சொன்னால் பறக்கலாம். நெருப்பு மழையை வரவைக்கலாம்” என திடீரென மாயாஜாலம் செய்பவர் போல் பேசத் தொடங்கினார். ஒருகட்டத்தில் இந்த ஜென்மத்தில் அழகாய் பிறக்காததற்கு பூர்வ ஜென்மப் பலன்களே காரணம் என்ற ரீதியில் பேசத் தொடங்கினார்.

கல்வித்துறை உயர் அதிகாரிகள் ஏற்பாடு செய்த நிகழ்ச்சி என்பதால் அதுவரை பொறுமை காத்த ஆசிரியர்களில் ஒருவர், இனியும் தாங்க முடியாதுடா சாமி என வெகுண்டெழுந்தார். பாவ, புண்ணியம், கர்மா பற்றி மாணவர்களிடம் பேசுவதா என ஆவேசமாக குறுக்கிட்டார்.  பள்ளியில் ஆன்மீகம் பேசுவது தப்பு என்றால், என்னை ஏன் பேச அழைத்தீர்கள் என மகாவிஷ்ணு குறுக்குக் கேள்வியும் கேட்டார்.

மேலும் மறுபிறவியைப் பற்றி மாணவர்களிடம் எப்படி பேசலாம் என ஆசிரியர்கள் கேட்டதற்கு வேற யார் சொல்லிக் கொடுப்பார் என தன்னை புராணங்களில் கூறப்படும் படைப்புக் கடவுள் பிரம்மனாக நினைத்து, கேள்வி எழுப்பினார் மகாவிஷ்ணு. பள்ளிகளில் ஆன்மீகம் சொல்லித் தரக்கூடாதென்று எந்த சட்டம் சொல்கிறது எனக் கேட்டு லா பாயின்ட்டும் பேசி, அரசியல் அமைப்பு ஞானத்தையும் விளக்க முயன்றார்.

முன்னதாக தனது சொற்பொழிவினூடே ஏதேதோ உருக்கமாகப் பேசி மாணவியர் சிலரையும் அழ வைத்தார் மகாவிஷ்ணு. ஏற்கெனவே நடிகர் தாமு இதே பாணியில் மாணவிகளை அழவைத்ததற்கு கடும் கண்டனங்கள் எழுந்து அது நிறுத்தப்பட்ட நிலையில், அரசுப் பள்ளிகளில் புதிதாய் தோன்றியிருக்கிறார் மகாவிஷ்ணு. பள்ளிக்கூடத்திற்கு அவராக வந்துவிடவில்லை. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் ஏற்பாட்டில்தான் வந்திருக்கிறார். அவருக்கு கிடைத்த வரவேற்பைப் பார்த்தே அதை உணர முடியும்.

இந்நிலையில், மகாவிஷ்ணு பேசிய வீடியோக்கள் இணையத்தில் வெளியானதும் அதிர்ச்சியடைந்த நெட்டிசன்கள் “இது என்ன தமிழ்நாடா? அல்லது யோகி ஆதித்யநாத் ஆளும் உத்தரப்பிரதேசமா” என கோபமாக கேள்வி எழுப்பியதைப் பார்க்க முடிந்தது. அரசுப் பள்ளிகளில் ஆன்மீக வகுப்புகள் நடத்தலாமா அதற்கு அரசே துணைபோவதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

சில நாட்களுக்கு முன்பு பெரம்பலூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் பற்றி அரசுப் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு கடும் எதிர்ப்பை தொடர்ந்து திரும்பப் பெறப்பட்ட நிலையில், அதற்கு பல படிகள் மேலே போய் அரசுப் பள்ளியில் ஆன்மீக உரையையே அதிகாரிகளின் ஆசியுடன் நிகழ்த்தியுள்ளார் மகாவிஷ்ணு.

இதற்கிடையே பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸுடன் மகாவிஷ்ணு இருக்கும் புகைப்படமும் எக்ஸ் தளத்தில் வெளியானது. இதனால் அதிர்ச்சி அடைந்த நெட்டிசன்கள், “அரசுப் பள்ளிகளை RSS கூடாரமாக மாத்தி சீரழிக்காம விடமாட்டீங்க போல” என பதிவிட்டு ஆதங்கப்பட்டனர்.

அமைச்சருடன் மகாவிஷ்ணு இருந்த புகைப்படம் வெளியானதுடன், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தலைவரும், திமுக கொள்கை பரப்புச் செயலாளருமான, திண்டுக்கல் லியோனியுடன் மகாவிஷ்ணு இருக்கும் புகைப்படமும் நெட்டிசன்களால் பகிரப்பட்டது. ஒரு பக்கம் திராவிடக் கொள்கைகளை முழங்க பேச்சாளர்கள் தேர்வு, அதற்கு நடுவில் ஆன்மீகத்திற்குமா என்றும் அவர்கள் விமர்சித்தனர்.

இந்த மோட்டிவேஷனல் ஸ்பீக்கர் மகாவிஷ்ணு தன் பெயர் காரணத்தை கூறுவதே அலாதிதான். இவர் ஆன்மீகம், அரசியல் மட்டுமின்றி லௌகீக வாழ்க்கை பற்றியும், பாலியல் விவகாரங்கள் பற்றியும் உரைகள் நிகழ்த்தி வருவதையும் நெட்டிசன்கள் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளனர்.

கடவுள் மறுப்புக் கொள்கை கொண்ட திராவிடர் கழகத்தில் இருந்து உதித்த திமுக-வின் ஆட்சியில் முத்தமிழ் முருகன் மாநாடு எனும் ஆன்மீக மாநாடு நடத்துவதா என விமர்சனத்திற்கு ஆளான நிலையில், தற்போது அரசுப் பள்ளிகளில் ஆன்மீகச் சொற்பொழிவு நடத்த அரசுத்துறையினரே அனுமதித்திருப்பது பலரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

அரசுப் பள்ளிகளில் ஆன்மீக சொற்பொழிவு நடத்தப்பட்டதை கண்டித்து, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் உள்ளிட்டோர் சென்னையில் இன்று போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Department of School Education government school Spiritual Discourse in Government School in Chennai Question on Internet about Spiritual Discourse in Government School Netizens Asking Question on Internet about Spiritual Discourse in Government School Question to School Education Minister on Internet about Spiritual Discourse in School Maha Vishnu who delivered Spiritual Discourse in School Maha Vishnu who gave Spiritual Discourse to School Students - சென்னையில் அரசுப் பள்ளியில் ஆன்மீகச் சொற்பொழிவு அரசுப் பள்ளியில் ஆன்மீகச் சொற்பொழிவு குறித்து இணையத்தில் கேள்வி அரசுப் பள்ளியில் ஆன்மீகச் சொற்பொழிவு குறித்து இணையத்தில் கேள்வி எழுப்பும் நெட்டிசன்கள் பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு இணையத்தில் கேள்வி பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு ஆற்றிய மகாவிஷ்ணு பள்ளி மாணவர்களிடம் ஆன்மீக சொற்பொழிவாற்றிய மகாவிஷ்ணு
Trending News
Recent News
Prev
Next