Jharkhand Elections 2024 Phase 2: ரூ. 400 கோடி சொத்து மதிப்புள்ள வேட்பாளர்! எந்தக் கட்சி தெரியுமா?
ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள 81 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இரு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் முதற்கட்டமாக 43 தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு கடந்த 13-த் தேதி முடிவடைந்தது. மீதமுள்ள தொகுதிகளுக்கு நாளை (20-ம் தேதி) வாக்குப் பதிவு நடைபெறுகிறது. ஜார்க்கண்ட் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் 23-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
இந்நிலையில் இரண்டாம் கட்ட வாக்குப் பதிவுக்கான தேர்தல் பிரச்சாரங்கள் நேற்றோடு முடிவடைந்து, மக்கள் வாக்களிக்க தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தின் இரண்டாம் கட்டத் தேர்தலில் ரூ. 400 கோடி சொத்து மதிப்புக் கொண்ட வேட்பாளர் குறித்தும், சொத்து மதிப்பே இல்லாத வேட்பாளர் பற்றியும் தகவல் வெளியாகியுள்ளது.
ஏடிஆர் அமைப்பு வெளியிட்டுள்ள தகவலின்படி, ஜார்க்கண்ட் மாநிலத்தின் பக்குர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் சமாஜ் வாதி கட்சியின் அகில் அக்தர் ரூ. 400 கோடி சொத்து மதிப்புக் கொண்டு அதிக சொத்து மதிப்புக் கொண்ட வேட்பாளர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தின் மகேஷ்பூர் தொகுதியில் போட்டியிடும் ஜார்க்கண்ட் மக்கள் கட்சியின் வேட்பாளரான எலியன் ஹன்ஸ்டாக் என்பவரிடம் எந்தச் சொத்துமே இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.
ஏடிஆர் அமைப்பு வெளியிட்டுள்ள தரவுகளின்படி, இரண்டாம் கட்டத் தேர்தலில் போட்டியிடும் 522 வேட்பாளர்களில் 127 வேட்பாளர்கள் கோடீஸ்வரர்கள் என்பது தெரியவந்துள்ளது.
இதில், பாஜகவில் 32 வேட்பாளர்கள், அதாவது கோடீஸ்வரர் வேட்பாளர்களில் 72 சதவீதம் பாஜக வேட்பாளர்கள் என்றும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவில் 90 சதவீதம் வேட்பாளர்கள் கோடீஸ்வரர் வேட்பாளர்கள் என்றும், காங்கிரஸில் 83 சதவீதம் வேட்பாளர்கள் கோடீஸ்வரர் வேட்பாளர்கள் என்றும் தெரியவந்துள்ளது.