தாமதமாக பள்ளிக்கு வந்தது குற்றமா? மாணவிகளின் முடியை வெட்டிய ஹாஸ்டல் வார்டன்!
ஆந்திர மாநிலத்தில் பள்ளிக்கு தாமதமாக வந்த மாணவிகளின் தலைமுடியை பள்ளியின் ஹாஸ்டல் வார்டன் கத்தரிக்கோலால் வெட்டி எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹாஸ்டல் வார்டன் மீது நடவடிக்கை பாயுமா?
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் கேஜிபிவி என்ற மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவிகள் சிலர் பள்ளி வளாகத்தில் உள்ள ஹாஸ்டலில் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலயில், மாணவிகளில் சுமார் 15 பேர் பள்ளிக்கு தாமதமாக வந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த ஹாஸ்டல் வார்டன் பிரசன்ன குமாரி, மாணவிகளை சுமார் 2 மணி நேரம் வெயிலில் நிற்க வைத்து விட்டார். அதன்பின்னும் ஆத்திரம் அடங்காத அவர் கத்திரிக் கோல் ஒன்றை எடுத்துக் கொண்டு ஆவேசமாக வந்துள்ளார். பயந்து நடுங்கியபடி நின்று கொண்டிருந்த மாணவிகளின் தலைமுடியைப் பிடித்து கந்தரகோலமாக வெட்டி எரிந்துள்ளார் வார்டன் பிரசன்ன குமாரி. இதனால் மாணவிகள் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து நின்றுள்ளனர்.
அதன்பின் இது தொடர்பாக வெளியில் யாரிடமும் சொல்லக்கூடாது என்றும் வார்டன் மாணவிகளை மிரட்டி இருக்கிறார். இந்த தகவல் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவிகள் பெற்றோர் மற்றும் உறவினர்கள் இந்த சம்பவத்தால் கொந்தளித்துப் போய் உள்ளனர்.
அந்த வார்டனை பணியிடை நீக்கம் செய்வதோடு, அவர் மீது வழக்குப் பதிவு செய்து தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை தற்போது எழுந்துள்ளது.