பிரதமர் மோடிக்கு டொமினிகா நாட்டின் உயரிய தேசிய விருது அறிவிப்பு

announcement-of-dominicas-highest-national-award-for-prime-minister-modi
  • Publisher : dailythanthi
  • Author : -
  • Last Update : 2024-11-14 20:32:00

ரோசி,

உலகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்று பரவலின்போது, அமெரிக்கா, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளுக்கு இந்தியா மருந்து பொருட்களை வழங்கி உதவியது. இதனால், லட்சக்கணக்கான மக்கள் காப்பாற்றப்பட்டனர். கொரோனாவை கட்டுப்படுத்த, பரவலை தடுக்கும் வகையிலான மருந்து பொருட்களை டன் கணக்கில் அந்நாடுகளுக்கு அனுப்பி இந்தியா உதவிக்கரம் நீட்டியது.

இதற்காகவும், டொமினிகா மற்றும் இந்தியா இடையேயான நட்புறவை பலப்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் கூடிய செயல்பாட்டுக்காகவும், பிரதமர் மோடியை கவுரவிக்க டொமினிகா அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, அந்நாட்டின் உயரிய தேசிய விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

கயானா நாட்டின் ஜார்ஜ்டவுன் நகரில் வருகிற 19 முதல் 21 வரையிலான 3 நாட்களில் இந்தியா-கேரிகோம் உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில், பிரதமர் மோடிக்கு டொமினிகா காமன்வெல்த் நாட்டின் ஜனாதிபதி சில்வானி புர்தன், விருது வழங்கி கவுரவிக்க இருக்கிறார்.

2021-ம் ஆண்டு பிப்ரவரியில், கொரோனா தடுப்புக்கான 70 ஆயிரம் ஆஸ்டிராஜெனிகா டோஸ்களை டொமினிகாவுக்கு, இந்தியா வழங்கியது. இதனால், அவற்றை பெற்று சக கரீபியன் நாடுகளுக்கு டொமினிகா ஆதரவுகரம் நீட்டியது.

டொமினிகாவுக்கு சுகாதாரநலன், கல்வி மற்றும் தகவல் தொழில் நுட்பம் ஆகியவற்றில், பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் இந்தியா சார்பில் வழங்கப்பட்ட ஆதரவுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் இந்த விருது அமைந்துள்ளது.

இதேபோன்று, டொமினிகா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிக்கு ஆதரவளித்த பிரதமர் மோடிக்கு நன்றியை வெளிப்படுத்தும் வகையில் இந்த விருது அமையும் என அந்நாட்டின் பிரதமர் ரூஸ்வெல்ட் ஸ்கெர்ரிட் கூறியுள்ளார்.

Ads
Recent International News
Trending News
Recent News
Prev
Next