இலங்கையின் புதிய பிரதமர் யார்..? நாளை அறிவிப்பை வெளியிடும் அதிபர் திசநாயக்க..!
இலங்கையின் புதிய பிரதமரை, அதிபர் அநுர குமார திசநாயக்க நாளை அறிவிப்பார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இலங்கையில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திசநாயக்க வெற்றிப்பெற்று அதிபரானார்.
இலங்கை நாடாளுமன்றத்தில் தேசிய மக்கள் சக்தி கூட்டணிக்கு 3 எம்.பி.க்கள் மட்டுமே இருந்த நிலையில், அவர் நாடாளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டார். அப்போது, இடைக்கால பிரதமராக பெண் எம்.பி. ஹரிணி அமர சூரியாவை நியமித்தார். 225 இடங்களை கொண்ட இலங்கை நாடாளுமன்றத்துக்கு கடந்த வியாழக்கிழமை தேர்தல் நடைபெற்றது. இதில் 159 இடங்களை கைப்பற்றி தேசிய மக்கள் சக்தி கூட்டணி அமோக வெற்றிப் பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.
இந்த நிலையில் இலங்கையின் புதிய பிரதமர் மற்றும் அமைச்சர்கள் பட்டியலை, அதிபர் திசநாயகா நாளை அறிவிப்பார் என்று தேசிய மக்கள் சக்தி கூட்டணி தெரிவித்துள்ளது. இலங்கை தேர்தல் வரலாற்றில் 6.55 லட்சம் வாக்குகளை பெற்றதோடு, ராஜ பக்ஷேவின் சாதனையை முறியடித்த ஹரிணி அமர சூரியாவுக்கே பிரதமர் பதவி வழங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே புதிய நாடாளுமன்றத்தின் முதல் கூட்டம் வருகிற 21ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.