அவர்கள் ஏன் இந்திய அணியில் இடம்பெறவில்லை? கம்பீருக்கு ஹர்பஜன் மறைமுக கேள்வி

why-are-they-not-included-in-the-indian-team-harbhajan-indirect-question-to-gambhir
  • Publisher : dailythanthi
  • Author : -
  • Last Update : 2024-07-20 16:54:00

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 27ம் தேதி தொடங்குகிறது. இதையடுத்து இந்த தொடருக்கான இந்திய அணி நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது.

இதில் இந்திய டி20 அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாகவும், ஒருநாள் அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். டி20 மற்றும் ஒருநாள் அணிகளுக்கு சுப்மன் கில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆனால் டி20 அணியில் இளம் வீரர்கள் அபிஷேக் சர்மா மற்றும் ருதுராஜ் ஆகியோர் கழற்றி விடப்பட்டு சுப்மன் கில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டது ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும் சஞ்சு சாம்சன் டி20 அணியில் இடம்பிடித்துள்ள வேளையில், ஒருநாள் போட்டிக்கான அணியில் இடம்பெறவில்லை. மறுபுறம் ரியான் பராக் 2 வடிவிலான அணியிலும் இடம்பிடித்துள்ளார். இது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தனது கடைசி போட்டியில் சதமடித்து இந்தியாவை வெற்றி பெற வைத்த சஞ்சு சாம்சனுக்கு இலங்கை ஒருநாள் தொடரில் வாய்ப்பு கிடைக்காததை புரிந்து கொள்ள முடியவில்லை என ஹர்பஜன் சிங் ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார். அத்துடன் அபிஷேக் சர்மா, டி20 உலகக் கோப்பை அணியில் தேர்வாகியிருந்த சஹால் ஆகியோரை கழற்றி விட்டது ஏன்? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் கம்பீரிடம் மறைமுகமாக அவர் கேள்வி எழுப்பியுள்ளது பின்வருமாறு:- "யுஸ்வேந்திர சஹால், அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் ஆகியோர் இலங்கை தொடருக்கான இந்திய அணியில் ஏன் இடம் பிடிக்கவில்லை? என்பதை புரிந்து கொள்வது கடினமாக இருக்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.

Ads
Recent Sports News
Trending News
Recent News
Prev
Next