வைஃபை பிளானில் ஏர்டெல் கொண்டுவந்த புதிய அப்டேட்... இலவச ஜி5 ஓடிடி-யும் இணைப்பு
முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான, பாரதி ஏர்டெல் சமீபத்தில் தன் வைஃபை பயனர்களுக்கு, குறிப்பாக ஓடிடி-களில் ஆர்வம் காட்டும் வாடிக்கையாளர்களை கவரும் விதமாக ஒரு அசத்தலான அப்டேட்டை வெளியிட்டுள்ளது.
இந்த நடவடிக்கை, ஏர்டெல் தனது ரூ.699 பிளான் அல்லது அதைவிட கூடுதல் விலையில் வைஃபை பிளான்களை தேர்வு செய்யும் பயனர்களுக்கு, இலவச ஜி5 ஓடிடி (ZEE5 OTT) சந்தாவை இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளது. இதற்காக முன்னணி டிஜிட்டல் பொழுதுபோக்கு தளமான ஜி5 உடன் ஏர்டெல் கைகோர்த்துள்ளது.
இந்த முயற்சி ஏர்டெல்லின் பிராட்பேண்ட் சலுகைகளை மேம்படுத்தி, அதன் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் அம்சங்களை வழங்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. ஏர்டெல்லின் பிராட்பேண்ட் திட்டங்களுடன் புதிதாக, ஜி5 ஓடிடி சப்ஸ்கிரிப்ஷனை வழங்குவது, தொலைத்தொடர்பு நிறுவனத்தின் டிஜிட்டல் சேவைகளை மேம்படுத்தும் வரிசையில் குறிப்பிடத்தக்க அம்சமாக பார்க்கப்படுகிறது.
ஏர்டெல் வைஃபை பயனர்கள், ஏற்கனவே அமேசான் பிரைம், நெட்ஃபிளிக்ஸ் மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் உள்ளிட்ட பலவிதமான ஓடிடி பிளாட்பார்ம்களுக்கான அணுகலைப் பெற்றுள்ளனர். ஜி5-ஐ இந்தப் பட்டியலில் சேர்ப்பது வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் பொழுதுபோக்கு விருப்பங்களை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம், பிரத்யேக டிஜிட்டல் ஓடிடி-கள் மூலமாக திரைப்படங்கள், நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பரந்த பொழுதுபோக்கு அம்சங்களை பயனர்கள் அனுபவிக்க முடியும்.
ஏர்டெல்லின் பிராட்பேண்ட் திட்டங்கள், பயனர் தேவைகளைப் பூர்த்தி செய்யும் விதமாக பல்வேறு வேக விருப்பங்களில் கிடைக்கிறது. ரூ.499 முதல் பிராட்பேண்ட் பிளான்கள் தொடங்குகின்றன. இருப்பினும், இலவச ஜி5 ஓடிடி சப்ஸ்கிரிப்ஷன் ரூ.699 பிளான் மற்றும் அதைவிட கூடுதல் விலைகளைக் கொண்ட பிளான்களுக்கு கிடைக்கும்.
ஏர்டெல்லின் பிராட்பேண்ட் பிளான்கள், ரூ.699 திட்டத்தில் 40 எம்பிபிஎஸ் வேகத்தில் இருந்து, ரூ.3,999 திட்டத்தில் 1 ஜிபிபிஎஸ் வேகம் வரை வழங்குகிறது. இந்தத் திட்டங்களில் ஏதேனும் ஒன்றைத் தேர்வுசெய்யும் வாடிக்கையாளர்கள், கூடுதல் கட்டணமின்றி ஜி5 -இன் முழு பொழுதுபோக்கையும் அனுபவிக்க முடியும்.
புதிய பிராட்பேண்ட் இணைப்பை தொடங்கவிருக்கும் வாடிக்கையாளர்களுக்கு, ஏர்டெல் இன்னும் கவர்ச்சிகரமான சலுகைகளை வழங்குகிறது. அதாவது, நிறுவனம் புதிய வாடிக்கையாளர்களுக்கு, இலவச இன்ஸ்டாலேஷன் மற்றும் வைஃபை ரூட்டரை வழங்குகிறது. இதன் மூலம் இணைப்பு கட்டணம் உள்ளிட்ட ஆரம்ப கட்டணங்கள் நீக்கப்படுகின்றன.
கூடுதலாக, ஏர்டெல் ஆனது 24 மணி நேரமும் வாடிக்கையாளர் ஆதரவை வழங்குவதாக தெரிவிக்கிறது. அதன் பயனர்களுக்கு தடையற்ற மற்றும் இடையூறு இல்லாத இணைய அனுபவத்தை வழங்குவதாகவும் உறுதி அளிக்கிறது. இந்த விரிவான சேவையுடன், இலவச ஜி5 சப்ஸ்கிரிப்ஷனும் இணைவது ஏர்டெல்லுக்கு கூடுதல் மதிப்பைத் தரும். மேலும், ஏர்டெல்லை பிராட்பேண்ட் சந்தையில் வலுவான போட்டியாளராக மாற்றவும் இது உதவும் என்று கூறுகிறார்கள்.
முடிவாக, ஜி5 உடனான ஏர்டெல்லின் ஒப்பந்தம், அதன் வைஃபை திட்ட சலுகைகளை கணிசமாக மேம்படுத்துகிறது, இது அதிவேக இணையம் மற்றும் பிரீமியம் டிஜிட்டல் பொழுதுபோக்குகளை தேடும் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் சிறந்த தேர்வாக அமையும்.