நானே எதிர்பாரா அளவிற்கு என்னை இன்பக்கடலில் மூழ்கடித்துவிட்டது - நன்றி தெரிவித்த இயக்குநர் பாலா

i-was-drowned-in-an-ocean-of-pleasure-beyond-my-expectations-director-bala-thanked
  • Publisher : dailythanthi
  • Author : -
  • Last Update : 2024-12-22 22:35:00

சென்னை,

இயக்குநர் பாலா தற்போது நடிகர் அருண் விஜய் நடிப்பில் 'வணங்கான்' திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் ரோஷினி பிரகாஷ் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தில் இயக்குநர் மிஷ்கின், சமுத்திரக்கனி, சண்முக ராஜன், அருள்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்த படம் வருகிற ஜனவரி 10-ம் தேதி வெளியாகவுள்ளது.

சமீபத்தில் 'வணங்கான்' படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் பாலா 25 விழா சென்னையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இவ்விழாவில் திரையுலகைச் சேர்ந்த பலரும் கலந்து கொண்டனர். நடிகர் சூர்யா, மிஷ்கின், மணிரத்னம் ஆகியோர் பேசிய விஷயங்கள் வைரலானது. படத்தின் முதல் பாடலான இறை நூறு பாடல் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் 'வணங்கான்' படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் 25-ம் ஆண்டு திரைப்பயணத்திற்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து இயக்குநர் பாலா அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:-

வணக்கம், கடந்த 18-12-2024-ம் தேதி நடைபெற்ற எனது "25-ம் ஆண்டு திரைப்பயண விழா மற்றும் வணங்கான் இசைவெளியீட்டு விழா" நானே எதிர்பாரா அளவிற்கு என்னை இன்பக்கடலில் மூழ்கடித்துவிட்டது. எத்தனை எத்தனை அன்பு உள்ளங்கள், அத்தனை பேரும் வந்திருந்து வாழ்த்திச் சென்றதில் என் உள்ளம் மகிழ்ந்து நிறைந்தேன். நேரில் வர இயலாத சூழலலில், பலரும் தொலைபேசி வாயிலாக அழைத்தும் வாழ்த்து மழை பொழிந்தனர். நான் எந்த ஒரு அன்பர்களுக்கும் தனிப்பட்ட முறையில் எதையும் செய்ததாக நினைவில்லை. ஆனால் இந்த அத்தனை பேரும் என் மீதான அன்பின் மிகுதியால் இப்படி வாழ்த்துகளை வாரிக் குவித்துவிட்டனர். இடைவிடாத மக்கள் பணியிலும் எனக்காக நேரம் ஒதுக்கி வாழ்த்துச் செய்தி அனுப்பிய ஒவ்வொரு தலைவருக்கும் நான் எனது மனமார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன்.

'குறிப்பாக எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடியார், தொலைபேசி மூலம் பேசி அன்பு பாராட்டிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன், பாட்டாளி மக்கள் கட்சித்தலைவர் அன்புமணி ராமதாஸ், பாரதிய ஜனதா கட்சி தமிழ்நாடு மாநில தலைவர் அன்புச்சகோதரர் அண்ணாமலை, நிகழ்ச்சிக்கு நேரிலேயே வந்து வாழ்த்திய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, தொலைபேசி வாயிலாக அன்புமழை பொழிந்த மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கப்பாண்டியன், தமிழக சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி, தனியரசு முதலியோருக்கும் என் அன்பின் பணிவான நன்றி!

வர இயலாத சூழலைச் சொல்லி வருந்தி, என்னைப் பற்றியே எண்ணி, என் மீது அக்கறை கொண்டு கடிதம் எழுதிய என் முன்னத்தி ஏர் இயக்குநர் பாரதிராஜாவுக்கும் என் நெகிழ்வான நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்நிகழ்ச்சிக்காக உழைத்த கலைஞர்கள், தொழிலாளர்கள் ஒவ்வொருவரின் பெயரையும் தனித்தனியாகக் குறிப்பிட்டு நன்றி சொன்னால் அது மிக மிக நீண்ட கடிதமாகிவிடும் என்பதால்... அனைவருக்கும் என்றென்றும் நன்றி! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Ads
Recent Cinema News
Trending News
Recent News
Prev
Next