ஆனைமலையாறு-நல்லாறு திட்டம்; மத்திய அரசின் உதவியை தி.மு.க. அரசு ஏற்றுக்கொள்ளவில்லை - வானதி சீனிவாசன்
கோவை,
பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
"நெல்லையில் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை சரியான பதிலை கொடுத்திருக்கிறார். தேசிய பசுமை தீர்ப்பாயம் சரியான நடவடிக்கையை எடுத்திருக்கிறது. இது தொடர்ச்சியாக நடந்து கொண்டிருக்கும் பிரச்சினை. கோவை மாவட்டத்திலும் இதே பிரச்சினை இருக்கிறது. இங்குள்ள மாவட்ட நிர்வாகம் இதை மிக எச்சரிக்கையுடன் கண்காணிக்க வேண்டும். தமிழகம் என்பது குப்பைத்தொட்டி அல்ல.
மத்திய நீர்வளத்துறை மந்திரியாக இருந்த அர்ஜுன் ராம் மேக்வால் கோவை மாவட்டத்திற்கு வந்தபோது, கேரள அரசுடன் பேசி ஆனைமலையாறு-நல்லாறு திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு உதவி செய்யும் என்று கூறினார். ஆனால் அந்த திட்டத்தை செயல்படுத்துவதில் மத்திய அரசின் உதவியை ஏற்றுக்கொள்ள தி.மு.க. அரசு தயாராக இல்லை.
ஆனைமலையாறு-நல்லாறு திட்டம் என்பது கோவை, ஈரோடு மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும். அதைப் பற்றி தமிழக முதல்-அமைச்சர் ஏன் கேரள முதல்-மந்திரியுடன் பேசுவதில்லை? சிறுவாணி அணையின் பராமரிப்பு மிகவும் மோசமாக உள்ளது. கேரள அரசு ஒவ்வொரு ஆண்டும் மழை பெய்யும்போது அணையின் நீர்மட்டத்தை குறைத்து வைக்கிறது. நமக்கு பக்கத்தில் சிறுவாணி அணை இருந்தும் கோவை மக்கள் தண்ணீருக்கு கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதைப்பற்றி கேரள முதல்-மந்திரியிடம் தமிழக முதல்-அமைச்சர் பேசுவதில்லை."
இவ்வாறு வானதி சீனிவாசன் தெரிவித்தார்.