பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த நபர்? மாநிலம் விட்டு மாநிலம் வந்து கைது செய்த J&K போலீஸ்
மேற்கு வங்க மாநிலம், தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் ஜம்மு காஷ்மீர் மற்றும் மேற்கு வங்க காவல்துறையினர் இணைந்து தேடுதல் வேட்டை நடத்தினர். இதில், ஜாவேத் முன்ஷி எனும் நபரை கைது செய்துள்ளனர். இவர் பாகிஸ்தானை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவரும் தெஹ்ரீக்-இ-முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்தவராக இருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
கைது செய்யப்பட்டுள்ள நபர் மேற்கு வங்கம் வழியாக வங்கதேசத்திற்குள் சென்று அங்கு சதிவேலையில் ஈடுபட இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜாவேத், ஜம்மு காஷ்மீரில் பல சதி வேலையில் ஈடுபட்டு வெகு காலமாக தலைமறைவாக இருந்துள்ளார். இவரை ஜம்மு காஷ்மீர் போலீஸார் தீவிரமாகத் தேடி வந்துள்ளனர். இந்நிலையில், இன்று மேற்கு வங்கத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கை குறித்து விசாரித்தபோது, ஜாவேத் பல பயங்கரவாத செயல்களில் தொடர்புடையவர் என்றும், 2011-ல் அஹ்ல்-இ-ஹதீஸ்-ன் முக்கிய தலைவரான ஷௌகத் ஷா கொலை வழக்கில் சந்தேகிக்கப்படும் நபர் ஜாவேத் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் பல முறை பயங்கரவாத வழக்குகளில் சிறைப்படுத்தப்பட்டவர் என்றும் தெரியவந்துள்ளது.
ஜாவேத்திடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், போலியான பாகிஸ்தான் பாஸ்போர்ட்டை வைத்து வங்கதேசம், நேபாளம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு பல முறை பயணம் செய்ததும் கண்டறியப்பட்டுள்ளது.
தற்போது மேற்கு வங்கத்தில் கைது செய்யப்பட்ட ஜாவேத் ஜம்மு காஷ்மீர் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு, மேல் விசாரணைக்காக அங்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.