19 வயது இளைஞர் ஓட்டிய சொகுசு கார்; 4 வயது குழந்தை துடிதுடித்து பலி.. போலீஸ் விசாரணையில் தெரியவந்த உண்மை
மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் வடலா பகுதியில் அம்பேத்கர் கல்லூரி உள்ளது. அந்த கல்லூரி பகுதியில் சிலர் சாலையோரம் வசித்து வருகின்றனர். சனிக்கிழமை அன்று, அவ்வழியாக சொகுசு கார் ஒன்று வேகமாக வந்துள்ளது.
திடீரென கட்டுப்பாட்டை இழந்த அந்த கார் தறிகெட்டு ஓடியதில் சாலையோரம் வசிக்கும் தொழிலாளி ஒருவரின் 4 வயது மகன் மீது மோதியுள்ளது. இதில், படுகாயமடைந்த சிறுவன் துடிதுடித்து நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து ஏற்படுத்திய நபர், அருகில் உள்ள காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
விசாரணையில் விபத்து ஏற்படுத்தியவர் 19 வயதான சந்தீப் கோல் என்பது தெரியவந்தது. விபத்து நிகழ்ந்த போது அவர் மது போதையில் இல்லை என்பதை போலீசார் உறுதி செய்துள்ளனர். இருந்த போதும், கவனக் குறைவாக கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய இளைஞரை போலீசார், கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
2018 முதல் 2022 வரை இந்தியாவில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் சிக்கி 7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இதில், அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தில் ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 882 பேர் உயிரிழந்தனர்.
இதையடுத்து தமிழ்நாட்டில் 84 ஆயிரத்து 316 பேர் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மகாராஷ்டிராவில் 66 ஆயிரத்து 370 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், மும்பையில் அண்மைக் காலமாக சாலை விபத்து அதிகரித்து வரும் சம்பவத்தால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதனால், சாலை விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.