புதுசா கிரெடிட் கார்டு வாங்கி இருக்கீங்களா? அதுக்கு பட்ஜெட் எப்படி ரெடி பண்றதுன்னு பார்க்கலாம்!!!
சமீபத்தில் தான் கிரெடிட் கார்டு வாங்கினீர்களா? அப்படி என்றால் உங்களுக்கு இந்த பதிவு மிகவும் உதவியாக இருக்கும். புதிதாக கிரெடிட் கார்டை பயன்படுத்துபவர்கள் அதிகப்படியான செலவுகளை தவிர்ப்பதற்கு ஒரு பட்ஜெட்டை உருவாக்கிக் கொள்வது மிகவும் சிறப்பு. அவ்வாறு செய்வதன் மூலமாக மாத செலவுகளை கட்டுக்குள் வைக்கலாம். சொல்லப் போனால் இது ஒரு பல படிகள் நிறைந்த ஒரு செயல்முறை. முதல் மற்றும் முற்றிலும் அவசியமாக நீங்கள் ஒவ்வொரு மாதத்திற்கும் எவ்வளவு செலவு செய்கிறீர்கள் என்பதை கண்காணிக்க வேண்டும்.
அதன் மூலமாக ஒவ்வொரு பிரிவுக்கும் உங்களுடைய செலவு செய்யும் அளவு எவ்வளவு என்பதற்கான ஒரு வரம்பை நீங்கள் அமைக்கலாம். பிறகு உங்களுடைய மாத கிரெடிட் கார்டு இலக்குகளை அமைத்துக் கொள்ளலாம். அதே நேரத்தில் உங்களுடைய கிரெடிட் கார்டில் ஆட்டோ பேமெண்ட் மோடை ஆக்டிவேட் செய்து வைப்பதும் மிகவும் அவசியம். இவ்வாறு செய்வது ஒருவேளை நீங்கள் கிரெடிட் கார்டு பில்லை செலுத்துவதற்கு தவறிவிட்டால் கூட அதிக வட்டி விகிதத்தை செலுத்துவதில் இருந்து உங்களை பாதுகாக்கும். இப்போது கிரெடிட் கார்டு மூலமாக செலவு செய்வதற்கு ஒரு பட்ஜெட்டை உருவாக்குவதற்கான சில குறிப்புகளை பார்க்கலாம்.
உங்களுடைய மாத வருமானம் மற்றும் செலவுகளை ஆய்வு செய்யுங்கள்
முதலாவதாக நீங்கள் உங்களுடைய மொத்த மாத வருமானத்தை வரிகள் போக எவ்வளவு என்பதை கணக்கு செய்ய வேண்டும். அதன் பிறகு உங்களுடைய நிலையான செலவுகள் அதாவது வாடகை, யுட்டிலிட்டி பில்கள், இன்சூரன்ஸ் போன்றவற்றின் மொத்த பட்டியலையும் எடுங்கள். பிறகு உங்களுடைய உணவு, பொழுதுபோக்கு, போக்குவரத்து போன்றவற்றிற்கு ஒவ்வொரு மாதத்திற்கும் ஆகும் செலவை கணக்கு செய்யுங்கள். இதில் லோன்கள் அல்லது ஏற்கனவே இருக்கும் கிரெடிட் கார்டு கடன் போன்ற அனைத்து விதமான பேமெண்ட்களையும் நீங்கள் சேர்க்க வேண்டும்.
ஒவ்வொரு பிரிவுக்கும் செலவு செய்வதற்கான வரம்பை அமைப்பது உங்களுடைய செலவு செய்யும் பழக்கத்தை ஆய்வு செய்வது மிகவும் அவசியம். அவ்வாறு செய்து ஒவ்வொரு பிரிவுகளுக்கும் நீங்கள் கிரெடிட் கார்டை பயன்படுத்தி செலவு செய்யும் வரம்பை அமைத்துக் கொள்வது நல்லது. எனினும் அதே நேரத்தில் அத்தியாவசிய செலவுகள் மற்றும் சேமிப்புகளுக்கு ஒரு குறிப்பிட்ட அளவு பணத்தை நீங்கள் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
மாத கிரெடிட் கார்டு இலக்குகள்
நீங்கள் செலவு செய்யும் தொகையின் அடிப்படையில் உங்களால் டியூ தேதிக்கு முன்னர் எவ்வளவு கடனை அடைக்க முடியும் என்பதை தெரிந்து கொண்டு அதற்கேற்றவாறு ஒவ்வொரு மாதமும் கிரெடிட் கார்டுக்கு ஒரு இலக்கை அமைத்துக் கொள்ளுங்கள். அதே நேரத்தில் நீங்கள் இயர்னிங் பாயிண்ட்ஸ் அல்லது கேஷ் பேக்கில் கவனம் செலுத்துபவராக இருந்தால் குறிப்பிட்ட சில பிரிவுகளில் நீங்கள் அதிக அளவு செலவுகளை செய்ய வேண்டும். ஆனால் அந்த செலவுகளையும் நீங்கள் உங்கள் பட்ஜெட்டுக்கு உட்பட்டு செய்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
வார செலவுகளை கண்காணிப்பது
மாத செலவுகள் மட்டுமல்லாமல் ஒவ்வொரு வாரமும் நீங்கள் கிரெடிட் கார்டு பயன்படுத்தி எவ்வளவு செலவு செய்கிறீர்கள் என்பதை கண்காணிப்பது முக்கியம். பல கிரெடிட் கார்டு வழங்குனர்கள் நீங்கள் செலவு செய்யும் விதத்தை பிரிவுகளாகவும் அதனை கண்காணிக்கவும் பல்வேறு கருவிகளை வழங்குகின்றனர். அவற்றை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். குறிப்பிட்ட பிரிவுகளில் நீங்கள் அதிக அளவு பணத்தை செலவு செய்தால் அதனை எவ்வாறு குறைப்பது என்பதற்கான முயற்சிகளை நீங்கள் மேற்கொள்ள வேண்டும்.
வட்டியை குறைவாக வைக்க பேமெண்ட்களை ஆட்டோமேட் செய்யவும்
குறைந்தபட்ச டியூ தொகையை செலுத்துவதற்காகவது நீங்கள் ஆட்டோமேட்டிக் பேமெண்ட் ஆப்ஷனை எனேபிள் செய்வது அவசியம் அல்லது உங்களால் முடிந்தால் முழு பேலன்ஸ் தொகையையும் நீங்கள் ஆட்டோமேட் செய்து கொள்ளலாம். இவ்வாறு செய்வது லேட் ஃபீஸ் மற்றும் வட்டி செலுத்துவதில் இருந்து உங்களை பாதுகாக்கும்.
வழக்கமான முறையில் ஆய்வு செய்தல்
ஒவ்வொரு மாதத்தின் இறுதியிலும் உங்களுடைய செலவுகளை நீங்கள் ஆய்வு செய்தல் வேண்டும். மேலும் உங்களுடைய பட்ஜெட்டுக்கு தகுந்தாற்போல் உங்கள் செலவுகள் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இல்லையெனில் அதற்கேற்றவாறு நீங்கள் செலவு செய்யும் அளவுகளை மாற்றிக் கொள்வது நல்லது. அதே நேரத்தில் உங்களுடைய சேமிப்புகள் அல்லது முதலீடுகளிலும் கவனம் செலுத்துங்கள்.