2024-ம் ஆண்டில் திருமணம் செய்து கொண்ட சினிமா பிரபலங்கள்
2024 ஆண்டு முடிய இன்னும் சில நாட்களே உள்ளநிலையில், இந்த ஆண்டு பல சுவாரஸ்ய சம்பவங்கள் நடந்துள்ளன. குறிப்பாக இந்த ஆண்டு பல சினிமா பிரபலங்கள் திருமணம் செய்து கொண்டனர்.
1. கீர்த்தி சுரேஷ்- ஆண்டனி தட்டில்
நடிகை கீர்த்தி சுரேஷின் திருமணம் குறித்து அடிக்கடி வதந்திகள் இணையத்தில் வைரலானது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் ஆண்டனி தட்டில் என்பவரை 15 வருடங்களாக காதலித்து வருவதாக தெரிவித்தார். இருவருக்கும் கோவாவில் கடந்த 12-ம் தேதி திருமணம் நடைபெற்றது.
2. சித்தார்த்-அதிதி ராவ்
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சித்தார்த், நடிகை அதிதி ராவை காதலித்து வருவதாக சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டு வந்தநிலையில், இருவரும் கடந்த செப்டம்பர் மாதம் 16-ம் தேதி திருமணம் செய்துகொண்டனர். சித்தார்த்தும் அதிதி ராவும் கடந்த 2021-ம் ஆண்டு தமிழ், தெலுங்கில் வெளியான 'மகா சமுத்திரம்' படத்தில் ஒன்றாக நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
3. மேகா ஆகாஷ்-சாய் விஷ்ணு
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான மேகா ஆகாஷ், நடிகர் சாய் விஷ்ணுவை கடந்த செப்டம்பர் மாதம் 15-ம் தேதி திருமணம் செய்து கொண்டார்.
4. வரலட்சுமி - நிகோலய்
நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு, கடந்த ஜூலை மாதம் 2-ம் தேதி தாய்லாந்தில் தொழில் அதிபரான நிகோலய் சச்தேவுடன் திருமணம் நடைபெற்றது. இவர்களின் திருமணத்திற்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், பிரதமர் மோடி, ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பல பிரபலங்களுக்கு நேரில் அழைப்பிதழ் வழங்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
5. ஐஸ்வர்யா-உமாபதி
நடிகர் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா, 'பட்டத்து யானை' என்ற படத்தில் விஷால் ஜோடியாக நடித்து கதாநாயகியாக அறிமுகமானார். தமிழ், கன்னட மொழிகளில் வெளியான 'சொல்லி விடவா' படத்திலும் நடித்து இருந்தார். இவருக்கும் குணசித்திர நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதிக்கும் கடந்த ஜூன் மாதம் 10-ம் தேதி திருமணம் நடைபெற்றது.
6. காளிதாஸ் ஜெயராம்- தாரிணி காளிங்கராயர்
பிரபல நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ். சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான 'பாவக் கதைகள்' ஆந்தாலஜி தொடரில் காளிதாஸின் நடிப்பு பெரும் பாராட்டை பெற்றது. அந்த படத்தில் திருநங்கையாக வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பின்னர் விக்ரம், இந்தியன் 2 ஆகிய படங்கள் சிறிய வேடங்களில் நடித்திருந்தார். கடைசியாக தனுஷ் நடிப்பில் வெளியான 'ராயன்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இவர் மாடல் அழகி தாரிணி காளிங்கராயர் என்பவரை காதலித்து வந்தார். கடந்த 2023ம் ஆண்டு நவம்பர் மாதம் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், கேரளாவில் உள்ள குருவாயூர் கோவிலில் கடந்த 8-ம் தேதி திருமணம் நடந்தது.
7. அபர்ணா தாஸ்-தீபக் பரம்போல்
இயக்குனர் நெல்சன் இயக்கிய பீஸ்ட் படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்த அபர்ணா தாஸ், கவின் நடிப்பில் வெளியான டாடா படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இவருக்கும் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போலுக்கும் கடந்த ஏப்ரல் மாதம் 24-ம் தேதி திருமணம் நடைபெற்றது.
8. மீதா ரகுநாத்
'முதல் நீ முடிவும் நீ' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கவனம் ஈர்த்த நடிகை மீதா ரகுநாத், அதன் பின்னர் நடிகர் மணிகண்டனுடன் நடித்த 'குட் நைட்' திரைப்படம் மூலம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்த்தார். ஊட்டியில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மீதாவின் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், கடந்த மார்ச் 17-ம் தேதி திருமணம் நடந்தது.
9. சுவாசிகா-பிரேம் ஜேக்கப்
தமிழில் 'கோரிப்பாளையம், மைதானம், வைகை, சோக்காளி, அப்புச்சி கிராமம், சாட்டை ஆகிய படங்களில் நடித்திருந்த சுவாசிகா. சமீபத்தில், லப்பர் பந்து படத்தில் நடித்து பிரபலமானார். இவரும் மலையாள டி.வி நடிகர் பிரேம் ஜேக்கப் என்பவரும் காதலித்து வந்தனர். இவர்களது காதலை இருவீட்டு பெற்றோரும் ஏற்றுக் கொண்ட நிலையில் சுவாசிகா-பிரேம் ஜேக்கப் திருமணம் கடந்த ஜனவரி மாதம் 24-ம் தேதி கேரளாவில் நடந்தது.
10. நாகசைதன்யா- சோபிதா துலிபாலா
தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும், நடிகருமான நாக சைதன்யா, கடந்த 2017-ம் ஆண்டு நடிகை சமந்தாவை திருமணம் செய்து, பின்னர் கடந்த 2021-ம் ஆண்டு விவாகரத்து பெற்றார். அதன்பிறகு பல வருடங்களாக நண்பர்களாக பழகி வந்த சோபிதா துலிபாலாவை கடந்த 4 ம் தேதி ஐதராபாத்தில் திருமணம் செய்துகொண்டார்.
11. டாப்சி- மத்தியாஸ் போவ்
தமிழ், தெலுங்கு, இந்தியில் அதிக படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வரும் டாப்சி, டென்மார்க்கை சேர்ந்த பேட்மிண்டன் வீரர் மத்தியாஸ் போவை காதலித்து கடந்த கடந்த மார்ச் மாதம் 23-ம் தேதி திருமணம் செய்து கொண்டார்.
12. ரகுல் பிரீத்-ஜாக்கி பக்னானி
தமிழில் 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தில் நாயகியாக நடித்து பிரபலமான ரகுல் பிரீத் சிங், 'தேவ்', 'என்.ஜி.கே.', 'அயலான்' 'இந்தியன் 2' ஆகிய படங்களிலும் நடித்து இருக்கிறார். இவர் கடந்த பிப்ரவரி மாதம் 21-ம் தேதி இந்தி நடிகர் ஜாக்கி பக்னானியை திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் கோவாவில் நடந்தது.
13. சோனாக்சி சின்ஹா-சாஹீர் இக்பால்
14 வருடங்களாக சினிமாவில் நடித்து வரும் நடிகை சோனாக்சி சின்ஹா, கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'லிங்கா' படத்தில் நடித்து தமிழில் அறிமுகமானார். இவர் பல வருடங்களாக நடிகர் சாஹீர் இக்பாலை காதலித்து வந்தார். இதனையடுத்து, இவர்களது திருமணம் கடந்த ஜூன் மாதம் 23-ம் தேதி நடைபெற்றது.
14. புல்கித் சாம்ராட் - கிருத்தி கர்பந்தா
கடந்த 2018-ம் ஆண்டு வெளியான 'வீரே கி' திரைப்படத்தில் நடித்த புல்கித் சாம்ராட் மற்றும் கிருத்தி கர்பந்தா இருவரும் காதலிப்பதாகவும் டேட்டிங் செய்து வருவதாகவும் செய்திகள் வெளியாகின. தொடர்ந்து பகல்பந்தி (2019) மற்றும் தைஷ் (2020) ஆகிய படங்களில் இருவரும் இணைந்து நடித்தனர். அதனைத்தொடர்ந்து, கடந்த ஜனவரி மாதம் இருவரின் நிச்சயதார்த்தம் நடைபெற்றநிலையில், மார்ச் 15-ம் தேதி திருமணம் நடைபெற்றது.