இனி ஆண்டுக்கு 2 படங்கள் - நடிகர் சூர்யா
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. தற்போது ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் தனது 45-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு தற்காலிகமாக 'சூர்யா 45' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தினை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளார். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் திரிஷா நடிக்க உள்ளார். 20 வருடங்கள் இடைவெளிக்கு பிறகு சூர்யா-திரிஷா இணைந்து நடிக்கும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது.
நடிகர் சூர்யாவின் 44-வது படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வருகின்றார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இந்த படம் பீரியாடிக் கேங்க்ஸ்டர் மற்றும் காதல் பின்னணியை கதைக்களமாக கொண்டு உருவாகி வருகிறது. சூர்யா இத்திரைப்படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. நடிகை பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ், மற்றும் சுஜித் ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் இந்த படமானது அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் திரைக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.
சமீபத்தில் திரையரங்கில் வெளியான சூர்யா படங்கள் எதுவுமே மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெறவில்லை. ஓ.டி.டி.யில் வெளியான 'ஜெய் பீம்' மற்றும் 'சூரரைப் போற்று' ஆகிய படங்கள் கொரானா காலத்தில் மாபெரும் வரவேற்பினைப் பெற்றன. இப்போது சூர்யா நடிப்பில் 'சூர்யா 44' மற்றும் 'சூர்யா 45' ஆகிய படங்கள் தயாராகி வருகின்றன.
'சூர்யா 45' படத்தின் படப்பிடிப்புக்கு இடையே ரசிகர்களை சந்தித்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார் சூர்யா. இந்த நிகழ்வு கோயம்புத்தூரில் நடைபெற்றது. சுமார் 300 ரசிகர்கள் இதில் கலந்து கொண்டார்கள். அவர்களிடையே பேசும்போது, "இனி வருடத்துக்கு இரண்டு படங்கள் வெளியாகும். அதில் நான் உறுதியாக இருக்கிறேன்" என்று சூர்யா தெரிவித்துள்ளார்.
சூர்யாவின் இந்தப் பேச்சு ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. 2025-ம் ஆண்டு 'சூர்யா 44' மற்றும் 'சூர்யா 45' ஆகிய படங்கள் வெளியாகவுள்ளன.