செலவுகளை குறைக்க அலுவலகத்தை மாற்றும் அமேசான்! பெங்களூரில் தயாராகும் புதிய இடம்
அமேசான் இந்தியா நிறுவனம் தனது பெங்களூரு தலைமையகத்தை மல்லேஸ்வரம் மேற்கில் உள்ள உலக வர்த்தக மையத்திலிருந்து (WTC) நகரின் விமான நிலையத்திற்கு அருகில் உள்ள புதிய அலுவலகத்திற்கு மாற்ற தயாராகி வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
பிரிகேட் எண்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனத்திற்குச் சொந்தமான உலக வர்த்தக மையத்தில் மொத்தமுள்ள 18 தளங்களில் 5,00,000 சதுர அடி அளவுள்ள பிரீமியம் அலுவலக இடத்தை காலி செய்யும் நடவடிக்கை, செலவுக் குறைப்பு உத்தியின் ஒரு பகுதியாகும் என அமேசான் நிறுவனம் கூறியுள்ளது.
திடீரென அமேசான் நிறுவனம் இடமாற்றம் செய்யப் போவதால், தற்போது காலியாகும் இடத்திற்கு புதிய குடியிருப்பாளர்களைக் கண்டுபிடிப்பதில் உள்ள சவால்கள் மற்றும் அருகிலுள்ள குடியிருப்பு சொத்து வாடகைகளில் ஏற்படப் போகும் விளைவுகள் பற்றிய விவாதங்களை இது தூண்டியுள்ளது.
பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து சுமார் 15 நிமிட தூரத்தில் இருக்கும் சத்வா குழுமத்திற்கு சொந்தமான இடத்தில் புதிய அலுவலகம் அமைக்கப்பட உள்ளது. உலக வர்த்தக மையத்தில் தற்போது சதுர அடிக்கு ரூ.250 அமேசான் செலுத்தி வந்த நிலையில், புதிதாக மாறவுள்ள இடத்தின் வாடகை இதைவிட மூன்றில் ஒரு பங்கிற்கும் குறைவாகவே இருக்கும் எனக் கூறப்படுகிறது. இந்த இடமாற்றம் ஏப்ரல் 2025-ல் தொடங்கி ஏப்ரல் 2026-க்குள் முடிவடையும் என்று அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
விரைவில் மாறவிருக்கும் வளாகமானது ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் பணியாளர் அனுபவத்தை மேம்படுத்துவதற்கும் வடிவமைக்கப்பட்ட நவீன வசதிகளைக் கொண்டிருக்கும் என அமேசான் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியுள்ளார். இருப்பினும் இந்த வளாகத்தின் குறிப்பிட்ட விவரங்கள் வெளியே கசியவிடப்படாமல் உள்ளன. இதற்கிடையில், அமேசான் நிறுவனம் உலக வர்த்தக மையத்தின் குத்தகை தொகையை இன்னும் நிறுத்தவில்லை என்று பிரிகேட் எண்டர்பிரைசஸ் தெளிவுப்படுத்தியுள்ளது.
பெல்லாரி சாலையில் விரிவாக்கம் செய்ய அமேசான் விருப்பம் தெரிவித்தாலும், அதன் தற்போதைய குத்தகை ஒப்பந்தத்தை தொடர்ந்து மதிப்பளித்து வருவதாக அந்நிறுவனத்தின் பிரதிநிதி குறிப்பிட்டார். உலக வர்த்தக மைய வளாகம் பிரிகேட் கேட்வேயின் ஒரு பகுதியாகும். இது அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகம், மருத்துவமனை, பள்ளி மற்றும் ஹோட்டலை உள்ளடக்கிய 40 ஏக்கர் பரப்பளவுள்ள வளர்ச்சி மேம்பாட்டு பகுதியாகும். பல அமேசான் ஊழியர்களுக்கு குடியிருப்புகள் அருகாமையில் உள்ளதால் இந்த இடம் அவர்களுக்கு மிகவும் வசதியாக இருந்தது.
உலக வர்த்தக மைய கட்டிடத்திலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள புதிய தளம், பல சவால்களை முன்வைக்கிறது. குறிப்பாக பெங்களூருவின் மோசமான போக்குவரத்து நெரிசல் காரணமாக, விமான நிலையத்தை ஒட்டிய பகுதிக்கு பயணம் செய்ய 80 நிமிடங்களுக்கு மேல் ஆகலாம். கூடுதலாக, புதிய அலுவலகத்திற்கு மெட்ரோ இணைப்பு இல்லாதது பணியாளர்களின் பயணத்தை மிகவும் கடினமாக்கலாம். இருப்பினும் எதிர்கால உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான பல திட்டங்கள் தயார் நிலையில் உள்ளன.
இந்த இடமாற்றம் பெங்களூரின் ரியல் எஸ்டேட் சந்தையில் மிகப்பெரிய தாக்கங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமேசானால் காலி செய்யப்பட்ட பரந்த இடத்தை குத்தகைக்கு விடுவதில் பிரிகேட் எண்டர்பிரைசஸ் சிரமங்களை எதிர்கொள்ளலாம், மேலும் இது அருகிலுள்ள குடியிருப்பு வாடகைகளுக்கான தேவையை குறைக்கும்.
மறுபுறம், இன்ஃபோசிஸ், போயிங் மற்றும் ஃபாக்ஸ்கான் போன்ற நிறுவனங்கள் ஏற்கனவே விமான நிலைய காரிடார் பகுதியில் உள்ளதால், இனி இப்பகுதி வணிக நடவடிக்கைகளில் எழுச்சியைக் காணலாம். பணியாளர்கள், ரியல் எஸ்டேட் இயக்கவியல் மற்றும் நகரின் வணிக நிலப்பரப்பு ஆகியவற்றில் அமேசானின் இடமாற்ற நடவடிக்கை எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை வரும் ஆண்டுகளில் தெரிய வரும்.