விமானத்தில் செல்கிறீர்களா.. இனி நீங்களும் பயன்படுத்தலாம் வாட்ஸ்அப், யூடுயூப்...எப்படி?
விமானத்தில் பயணம் செய்பவர்கள் இத்தனை நாட்கள் மொபைலில் இணைய சேவை கிடைக்காமல் தவித்து வந்தனர். இதன் காரணமாக அவர்களால் ஃபேஸ்புக், யூடுயூப் போன்ற சமூக ஊடகங்களை பயன்படுத்த முடியாத நிலை இருந்தது. ஆனால் இனி அந்த கவலையில்லை.
ஒருவழியாக இத்தனை நாள் காத்திருப்பு முடிவிற்கு வந்துள்ளது. ஆமாங்க, இனி இந்தியாவில் விமானப் பயணம் செய்பவர்கள் கூடிய விரைவில் இணையத்தைப் பயன்படுத்தும் வாய்ப்பைப் பெறுவார்கள். இந்த சந்தோஷமான செய்தியை தான் பலரும் எதிர்பார்த்து காத்திருந்தனர். மேலும் இந்த வசதி இண்டிகோ, ஏர் இந்தியா மற்றும் பல விமான நிறுவனங்களால் வழங்கப்படும் என தெரிய வந்துள்ளது. சமீபத்தில் தான் இந்த வசதியை இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது. இதன் மூலம் விமானத்தில் பயணம் செய்யும் மக்கள் 3,000 மீட்டருக்கு மேல் உயரத்தில் இருக்கும்போது வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்பலாம். யூடுயூப்பில் வீடியோக்களை ஸ்ட்ரீம் செய்யலாம்.
இந்திய வான்வெளியில் பறக்கும் விமானத்தில் வைஃபை (Wi-Fi) வசதி வரப்போவதைப் பற்றிய செய்தியை பல ஆண்டுகளாக கேள்விப்பட்டு வருகிறோம். ஆனால் இந்த விஷயத்தில் மெதுவாகவே நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தன.
இப்போது வந்துள்ள புதிய தகவலின்படி, விமான நிறுவனங்களின் ஆபரேட்டர்கள் விமானங்களின் ஒரு பகுதியாக இருக்கவும், சேவை வழங்குநர்களுடன் பெயரளவிலான கட்டணத்தில் அவர்களை இணைத்துக்கொள்ள தயாராக இருக்க வேண்டும் எனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
விமானம் மற்றும் கடல்சார் இணைப்பு விதிகள், 2018-ன் கீழ், தரைவழி மொபைல் நெட்வொர்க்குகளில் குறுக்கிடுவதைத் தவிர்ப்பதற்காக, விமானத்தில் உள்ள மற்றும் கடல்சார் இணைப்பு சேவை வழங்குநர்கள் இந்திய வான்வெளியில் குறைந்தபட்சம் 3,000 மீட்டர் உயரத்தில் விமானங்களில் மொபைல் தகவல் தொடர்பு சேவைகளை வழங்க வேண்டும் என்று அரசாங்கம் கட்டாயப்படுத்தியுள்ளது.
இதற்கிடையில் இந்திய வான்பரப்பில் 3,000 மீட்டர் உயரத்திற்கு சென்ற பிறகும், விமானத்தில் மின்னணு சாதனங்கள் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டால் மட்டுமே, விமானத்தில் உள்ள பயணிகள் வைஃபை மூலம் இணைய சேவையைப் பயன்படுத்த முடியும் என்றும் அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது.
ஒருவேளை விமான நிறுவனங்கள் பயணத்தின் போது இணைய சேவை பயன்படுத்துவதை தடுத்தால், நம்மால் இந்த வசதியை பெற முடியாது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆகவே வைஃபை பயன்படுத்தும் முடிவு முழுவதும் விமன நிறுவனங்களின் கையில் தான் உள்ளது.
“துணை விதி (1) இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி இந்திய வான்வெளியில் குறைந்தபட்ச உயரம் இருந்தபோதிலும், விமானத்தில் மின்னணு சாதனங்களைப் பயன்படுத்த அனுமதிக்கப்படும் போது விமானத்தில் வைஃபை மூலம் இணைய சேவைகள் கிடைக்கும்” என்று இந்த மாத ஆரம்பத்தில் புதிய விதிகள் அறிவிக்கப்பட்டன.