திருப்பதி லட்டு விவகாரம் - உயர்நீதிமன்றத்தில் முறையிட்ட ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி!

ysr-congress-seeks-highcourt-in-tirupati-laddu-issue
  • Publisher : news18
  • Author : -
  • Last Update : 2024-09-20 22:16:00

லட்டு தயாரித்த நெய்யில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக எழுந்த புகார் தொடர்பாக, ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி உயர்நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது.

திருப்பதி லட்டு பிரசாதத்தில் மாட்டின் கொழுப்பு மற்றும் மீன் எண்ணெய் இருப்பதாக ஆய்வறிக்கை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜெகன்மோகன் ஆட்சியில் தான் இவை நடந்திருப்பதாக தற்போதைய முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியுள்ளார். மேலும் முதல்வர் சந்திரபாபு கூறியது உண்மைதான் என திருப்பதி தேவஸ்தான அதிகாரி சியாமளா ராவும் தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, கடவுள் விவகாரத்தில் அரசியல் செய்வதற்காக சந்திரபாபு நாயுடு பொய் சொல்வதாக தெரிவித்துள்ளார். மேலும் தனது ஆட்சியில் டெண்டர் நடைமுறையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்றும் 3 கட்ட பரிசோதனைகளுக்குப் பிறகு தான் திருப்பதி தேவஸ்தானத்திற்குள் நெய் அனுமதிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

தற்போது இந்த புகார் தொடர்பாக ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி உயர்நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது. அதில் முதலமைச்சர் முன்வைத்துள்ள இக்குற்றச்சாட்டை உயர்நீதிமன்ற நீதிபதி அல்லது விசாரணைக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதை பொது நல வழக்காக தாக்கல் செய்தால், வரும் 25 ஆம் தேதி விசாரணைக்கு எடுப்பதாக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, ஆந்திரா முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் உள்ளிட்டோர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று வழக்கறிஞர் வினீத் ஜின்டால் புகார் அளித்துள்ளார்.

இந்த நிலையில் திருப்பதி லட்டு தயாரிக்கப் பயன்படுத்திய நெய்யில் மாட்டுக்கொழுப்பு கலந்திருப்பதாக சர்ச்சை எழுந்த போதும், லட்டு விற்பனை வழக்கத்தை விட அதிகரித்துள்ளதாக தகவல் தெரிவிக்கிறது. நாளொன்றுக்கு 3 லட்சம் லட்டுகள் விற்பனையாகும் நிலையில், வியாழக்கிழமை மட்டும் 3 லட்சத்து 20 ஆயிரம் லட்டுகள் விற்பனையானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News
Recent News
Prev
Next