திருவண்ணாமலையில் பெண் கொலை: சாமியார் கைது - முக்தி அடைய செய்ததாக போலீசில் வாக்குமூலம்
ஆரணி,
ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மலையம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி அலமேலு (வயது 50) இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். சுப்பிரமணி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். மகன்கள், மகளுக்கு திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். இதனால் அலமேலு தனிமையில் வசித்து வந்தார்.
இந்தநிலையில், அதே பகுதியில் உள்ள எதிர் வீட்டை சேர்ந்த சாமியாரான தக்சன் (வயது 68) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அலமேலுவும் கழுத்தில் ருத்ராட்ச மாலைகள் அணிந்து கொண்டு சாமியார் போல் சுற்றி வந்தார். மேலும் திருவண்ணாமலையில் பவுர்ணமி அன்று கிரிவலம் செல்வதும் ஆன்மீக தலங்களுக்கு சென்று வழிபடுவதுமாக இருந்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு இருவரும் திருவண்ணாமலையில் கிரிவலம் சென்றனர். இந்தநிலையில் நேற்று அலமேலு கண்ணமங்கலம் அருகே உள்ள ஏரிக்கரையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். இது சம்பந்தமாக கண்ணமங்கலம் போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர்.
போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். தக்சனும், அலமேலுவும் ஒன்றாக வந்தது கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இதனை தொடர்ந்து சென்னை குன்னத்தூரில் ஆன்மீக ஆசிரமத்தில் பதுங்கி இருந்த தக்சனை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். அவரை கண்ணமங்கலத்திற்கு அழைத்து வந்தனர்.
போலீசாரிடம் சாமியார் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
தனிமையில் இருந்த அலமேலு என்னிடம் சாமிகளுக்கு சேவை செய்யும் நோக்கத்தோடு சேர்ந்தார். இருவரும் கோவில் குளங்களுக்கு சென்று வழிபட்டு வந்தோம். அப்போது அலமேலு எனக்கு முக்தி கிடைக்க வேண்டும் என்றால் திருவண்ணாமலை ஆன்மீக ஸ்தலத்தில் என் உயிர் போக வேண்டும் என்று கூறினார்.
இதனையடுத்து அலமேலுவை கண்ணமங்கலம் ஏரிக்கரைக்கு அழைத்து வந்தேன். இதுவும் திருவண்ணாமலை மாவட்டம்தான் என்று கூறி அவரது கழுத்தை அறுத்தேன். இதில் அவர் துடிதுடித்து இறந்தார். இவ்வாறு அவர் கூறியுள்ளார். போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.