ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்படும் பொருள்கள் இவை தான்.. நிர்மலா சீதாராமன்!
உயிர் காக்கும் மருத்துவ செயல்பாடுகளில் ஒன்றான ஜீன் தெரபிக்கு, GST-யில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம், ஜெய்சால்மரில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் 55-ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர், செறிவூட்டப்பட்ட அரிசி கர்னல் மீதான ஜிஎஸ்டி வரி 18% சதவீதத்திலிருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் பச்சை மிளகு, காய்ந்த மிளகு, உலர் திராட்சைகளை விற்பனை செய்யும்போது எந்தவிதமான ஜிஎஸ்டி வரியும் இல்லை எனவும் கூறியுள்ளார். ஆனால் வியாபாரிகள் அவற்றை வாங்கி விற்பனை செய்யும்போது அவற்றுக்கு வரி உண்டு எனவும் தெரிவித்துள்ளார்.
வங்கிக் கடன் பெற்றவர்கள் விதிகளை பூர்த்தி செய்யாவிடில் அபராதம் மீது ஜிஎஸ்டி கிடையாது எனவும் சுகாதாரம், ஆயுள் காப்பீடு பிரீமியம் மீது விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரியை குறைப்பது குறித்த முடிவு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
சர்வதேச அணுசக்தி அமைப்புக்கு GST-யில் இருந்து விலக்களிக்கப்படும் என்றும், நீண்ட தூர மேற்பரப்பு ஏவுகணை (LR-SAM) அமைப்புக்கு வரி விலக்கு அளிக்கப்படும் என கூறியுள்ளார். அரசு திட்டங்கள் மூலம் இலவசமாக வழங்கப்படும் உணவுகளின் மூலப் பொருட்களுக்கு GST விலக்கு அளிக்கப்படும் என கூறப்பட்டுள்ள நிலையில், கடிகாரங்கள், பேனா, ஷூ போன்ற காலணிகள் மற்றும் ஆடைகள் உள்ளிட்ட 148 பொருள்களுக்கான வரி விகிதத்தை மாற்றுவது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.
சமூகத்துக்கு தீங்கு விளைவிக்கும் பொருள்களுக்கு 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம், 28 சதவீதம் என்ற நான்கடுக்கு வரி விகிதங்களுக்கு மாற்றாக, 35 சதவீதம் வரியை அறிமுகப்படுத்துவது பற்றியும் விவாதிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.