2025-ல் அதிகரிக்க உள்ள மேகி நூடுல்ஸின் விலை.. எவ்வளவு, ஏன் தெரியுமா?
மேகியின் விலை உயரும் என்று எதிர்பார்க்கப்படும் விஷயமானது இந்தியாவிற்கும் - சுவிட்சர்லாந்திற்கும் இடையே நடந்து வரும் வர்த்தக மோதலுடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தக மோதல் பிரபலமான இன்ஸ்டன்ட் நூடுல்ஸான மேகியின் விலையில் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய மூலங்களிலிருந்து ஈட்டும் ஈவு தொகைக்கு (dividends) 10% வரை வரி வடிவில் அதிக செலவுகளைச் செய்ய இந்த முடிவு Nestlé உள்ளிட்ட சுவிஸ் நிறுவனங்களை கட்டாயப்படுத்தலாம். குறிப்பிடத்தக்க வகையில், 2023-24-ஆம் நிதியாண்டில் மேகி விற்பனை 6 பில்லியனை தொட்டதாக நெஸ்ட்லே இந்தியா அறிவித்தது. இது உலகளவில் பிராண்டின் மிகப்பெரிய சந்தையாக இந்தியா இருப்பதை உறுதிப்படுத்தியது. இதுமட்டுமின்றி நெஸ்ட்லே இந்தியா தனது பிரபலமான சாக்லேட்டாக இருக்கும் கிட்கேட்டின் 4.2 பில்லியன் ஃபிங்கர்ஸை விற்று, இந்தியாவை அதன் இரண்டாவது பெரிய சந்தையாக மாற்றியது.
இந்தியா-சுவிட்சர்லாந்து இடையிலான வர்த்தக பதற்றம்
2023-ஆம் ஆண்டு இந்திய உச்ச நீதிமன்றம் வழங்கிய ஒரு தீர்ப்பை தொடர்ந்து சர்ச்சை வெடித்தது, MFN (Most Favoured Nation) ஷரத்து தானாக பொருந்தாது மற்றும் இந்திய அரசால் வெளிப்படையாக அறிவிக்கப்பட வேண்டும் என்று அந்த தீர்ப்பு தெளிவுபடுத்தியது. மிகவும் சாதகமான வரி ஒப்பந்தங்களுடன் மற்ற நாடுகளுக்கு நீட்டிக்கப்பட்ட அதே பலன்களை தாங்கள் இந்தியாவிடமிருந்து பெறவில்லை என்று சுவிட்சர்லாந்து கூறியது.
இந்த பரஸ்பர பற்றாக்குறைக்கு பதிலளிக்கும் விதமாக, ‘மிக விருப்பமான நாடுகள்’ பட்டியலில் இருந்து இந்தியாவின் பெயரை சுவிட்சர்லாந்து நீக்கியது. சுவிட்சர்லாந்தின் இந்த நடவடிக்கையால் இந்திய நிறுவனங்கள் மற்றும் பொருட்களுக்கு சுவிட்சர்லாந்தில் முன்பு இருந்ததை விட, அதிக வரிகள் விதிக்கப்படும். மேலும் சுவிட்சர்லாந்தில் இருக்கும் இந்திய dividends-களுக்கான வரி 5 சதவிகிதத்தில் இருந்து 10 சதவிகிதமாக உயரும். சுவிட்சர்லாந்தின் dividends-களுக்கும் இந்தியாவில் இதே நிலை தான்.
இந்தியா-சுவிட்சர்லாந்து நாடுகளுக்கு இடையிலான வரி சார்ந்த பிரச்சனை நுகர்வோரை எவ்வாறு பாதிக்கும்.?
நிறுவனங்கள் மீதான கூடுதல் வரி சுமை அப்படியே நுகர்வோர் மீது சுமத்தப்பட வாய்ப்புள்ளது, இதனால் இந்தியாவில் மேகி மற்றும் பிற நெஸ்ட்லே பொருட்களின் விலை உயர கூடும்.. இது இந்தியாவிற்கும் சுவிட்சர்லாந்திற்கும் இடையிலான வர்த்தகத்தில் நிலவும் சவால்களை எடுத்துக்காட்டுகிறது மற்றும் அன்றாட நுகர்வோர் பொருட்களின் மீதான சர்வதேச வரிக் கொள்கைகளின் குறிப்பிடத்தக்க தாக்கம் ஏற்படும் என்பதையும் அடிக்கோடிட்டு காட்டுகிறது.