பிரபல WWE வீரர் ரே மிஸ்டீரியோ உயிரிழப்பா... உண்மை என்ன? - அதிர்ச்சி தகவல்!
புகழ்பெற்ற மெக்சிகன் மல்யுத்த வீரர் ரே மிஸ்டீரியோ (Rey Mysterio) உயிரிழந்தார் என்று தகவல் வெளியாகியுள்ள நிலையில் உண்மை என்னவென்பதை பார்ப்போம்.
பிரபலமான விளையாட்டுகளில் WWE மல்யுத்தமும் ஒன்று. குறிப்பாக இந்தியாவில், 90களில் தொடங்கி தற்போது வரை, WWE மல்யுத்த விளையாட்டுக்கு தனி ரசிகர்கள் இருக்கின்றனர். அப்படியான WWE விளையாட்டில், 619 பாடலுடன் என்ட்ரி கொடுத்து மல்யுத்த ரிங்கில் எகிறி குதித்து சண்டையிடும் பிரபல வீரர் ரே மிஸ்டீரியோ. 90ஸ் கிட்ஸ் மனதில் ரே மிஸ்டீரியோவுக்கென தனி இடமுண்டு. ரே மிஸ்டீரியோ என்றாலே அவரின் முகமூடி தான் நியாபகம் வரும். களத்தில் நேர்மையுடன் அதேநேரம் தனது வித்தியாசமான சண்டை நகர்வுகள் எதிராளிகளை நிலைகுலையச் செய்யும்.
ஆள் பார்க்க சின்ன பையன் மாதிரி இருந்தாலும் WWE ரிங்கிற்குள் பல ஜாம்பவான்களை புரட்டி மிரட்டியவர் ரே மிஸ்டீரியோ. இந்நிலையில், அவர் உயிரிழந்துவிட்டார் என்று தகவல் வெளியாகின..
உண்மை என்ன?
உண்மையில் உயிரிழந்தது ரே மிஸ்டீரியோ அல்ல அவரது மாமாவான ரே மிஸ்டீரியோ சீனியர். ரே மிஸ்டீரியோ சீனியர், ஜூனியர் இருவரும் பார்ப்பதற்கு ஒரே மாதிரி உடலமைப்புடன் உயரம் குறைவாக இருப்பதுடன் முகமூடி அணிந்து இருப்பார்கள் என்பதால் ரே மிஸ்டீரியோ ஜூனியர் உயிரிழந்துவிட்டார் என்று தகவல் பரவியது. ஆனால், உண்மையில் உயிரிழந்தது ரே மிஸ்டீரியோ சீனியர்.
இவர் 70, 80 கால கட்டங்களில் மல்யுத்தத்தில் கலக்கியவர். இறந்த அவரின் வயது 66. இவரின் பயிற்சியின் கீழ் தான் தான் 90ஸ் கிட்ஸ்களுக்கு பேவரைட்டான ரே மிஸ்டீரியோ பயிற்சி எடுத்து விளையாடினார்
தற்போது உயிரிழந்த ரே மிஸ்டீரியோ சீனியரின் இயற்பெயர் மிகுவல் ஏஞ்சல் லோபஸ் டயஸ். ஆரம்பத்தில் மெக்ஸிகோவில் லூச்சா லிப்ரே போட்டிகள் மூலம் புகழ் பெற்ற ரே மிஸ்டீரியோ சீனியர், உலக சாம்பியன்ஷிப் மல்யுத்தத்தின் ‘ஸ்டார்கேட்’ போன்ற நிகழ்வுகள் உட்பட சர்வதேச அளவில் தனது திறமையை வெளிப்படுத்தி இந்த இடத்தைப் பிடித்தார்.
மல்யுத்த விளையாட்டில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளுக்காக அறியப்பட்ட ரே மிஸ்டீரியோ சீனியர் , உலகம் முழுவதும் உள்ள எண்ணற்ற ரசிகர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தினார். மெக்சிகன் மல்யுத்தத்தை இன்று உலகமே அறிந்திருப்பதில் ரே மிஸ்டீரியோ சீனியருக்கு மிகப்பெரிய பங்குண்டு. அவரின் மறைவு உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.