அஸ்வினுடன் மோதல் என்பது உண்மையா? - மௌனம் கலைத்த ஹர்பஜன் சிங்!
கிரிக்கெட் உலகில் இந்தியாவை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் சுழற்பந்து ஜாம்பவானாக குறிப்பிடப்பட்டு வந்தார். இந்த நிலையில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடைபெற்று வரும் டெஸ்ட் தொடருக்கு நடுவே திடீரென அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அஸ்வின் திடீரென தந்து ஓய்வு முடிவை அறிவித்தது ரசிகர்களை மட்டுமல்ல இந்தியாவை சேர்ந்த பல முன்னாள் கிரிக்கெட் வீரர்களையும் அதிர்ச்சியடையவே செய்தது. இந்த நிலையில் அஸ்வின் ஓய்வுபெறுவதாக அறிவித்த பிறகு, நாட்டின் மற்றொரு சிறந்த சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் இந்திய கிரிக்கெட்டிற்காக அவர் செய்த சாதனைகளை பாராட்டி கருத்து தெரிவித்து உள்ளார்.
அதேபோல அஸ்வினுக்கும், தனக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு நீடிப்பதாக வெளியான தகவல்களுக்கும் ஹர்பஜன் சிங் மறுப்பு தெரிவித்து உள்ளார். தனக்கும் அஸ்வினுக்கும் இடையே மோதல் என்ற தகவல்கள் எல்லாம் வதந்திகள் என்பதையும் ஹர்பஜன் தெளிவுபடுத்தி உள்ளார். தங்கள் இருவருக்கும் இடையே எந்த மோதலும் இல்லை. அஸ்வினுடன் தனக்கு பிரச்சனை இருப்பது போல் சமூக வலைதளங்களில் வெளியான தகவல்கள் பொய்யானவை மற்றும் திரிக்கப்பட்டவை என்று ஹர்பஜன் கூறி உள்ளார்.
ஹர்பஜன் சிங் தனது யூடியூப் சேனலில் வெளியிட்ட வீடியோவில் பேசி இருப்பதாவது, “நான் சமூக வலைதளங்களைத் தேவையான அளவுக்கு மட்டுமே பயன்படுத்துகிறேன். எனக்கும் அஸ்வினுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டாலோ, சண்டை, சச்சரவு உண்டானாலோ அவரிடம் சென்று என்ன பிரச்சினை என்று முதலில் கேட்பது நானாக தான் இருப்பேன். ஆனால் இதுவரை அப்படி எதுவும் எங்களுக்குள் நடந்ததது இல்லை. இனியும் நடக்காது.
ஏனென்றால் அவருடைய விதியில் எது இருக்கிறதோ, அது அவருக்கு கிடைக்கும். என் விதி என்னவோ அதை நான் பெற்றேன். உண்மையில் அஸ்வின் இந்திய கிரிக்கெட் அணிக்கு ஒரு அற்புதமான பந்து வீச்சாளராக இருந்துள்ளார். அவர் செய்திருக்கும் சாதனைகளை நினைத்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்” என்று பேசியுள்ளார்.
“சோஷியல் மீடியாக்களில் விஷயங்களை திரித்து, அஸ்வினுடன் எனக்கு பிரச்சனை இருப்பது போல் கருத்துக்களை பதிவிடுவது என்பது அவர்களின் பார்வை. இந்தியா கிரிக்கெட் விளையாடும் ஆடுகளங்களோ நல்ல டிராக்குகள் இல்லை, இந்த டிராக்குகளில் நிறைய ஸ்பின் உள்ளது. இதனால், இரண்டரை நாட்களில் போட்டிகள் முடிந்துவிடும் என்ற உண்மையைப் பற்றி நான் கொஞ்சம் குரல் கொடுக்கிறேன்” என்றார்.
கடந்த 2011-ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அஸ்வின் அறிமுகமானார். இதை தொடர்ந்து சிவப்பு பந்து கிரிக்கெட் அவரது பலமாக மாறியது. அஸ்வின் 106 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 37 முறை 5 விக்கெட்டுகள் எடுத்ததோடு மொத்தம் 537 விக்கெட்டுகளை வீழ்த்தி 3,503 ரன்களை குவித்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 23 போட்டிகளில் விளையாடியுள்ள, அஸ்வின் 2.71 என்ற எகானமி ரேட்டில் 115 விக்கெட்டுகளை வீழ்த்தியுளளார். 38 வயதான இவர் ஒரு பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய சாதனையையும் படைத்துள்ளார். இந்த மதிப்புமிக்க சீரிஸின் 2020-21 வெர்ஷனில் மொத்தம் 29 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அதே போல முறியடிக்க முடியாத பல சாதனைகளை அஸ்வின் தற்போது தன் வசம் வைத்துள்ளார். 350 டெஸ்ட் விக்கெட்டுகளை மிக வேகமாக வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையை இவர் படைத்துள்ளார். இந்தியாவுக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது இந்திய வீரராகவும் அஸ்வின் உள்ளார்.