‘உண்டியலில் விழுந்தது முருகனுக்கே சொந்தம்..’ - ஐபோன் யூசருக்கு ஏமாற்றம் அளித்த அறநிலையத் துறை!

iphone-fell-into-the-murugan-temple-hundi-nw-mma-ws-b
  • Publisher : News18 (Ta)
  • Author : -
  • Last Update : 2024-12-21 11:37:00

திருப்போரூர் கந்தசாமி கோயிலில் காணிக்கை செலுத்த முயன்றபோது உண்டியலில் ஐபோனை பக்தர் ஒருவர் தவறவிட்டார். உண்டியலில் விழுந்தது கடவுளுக்குத்தான் சொந்தம் என கோயில் நிர்வாகம் கூறுவதால் திகைத்து நிற்கிறார் அந்த பக்தர்.

கடந்த 2000ஆம் ஆண்டு வெளியான பாளையத்து அம்மன் படத்தில் இடம்பிடித்த இதே காட்சி தற்போது நிஜமாக நடந்துள்ளது. ஆனால் நிஜத்தில் உண்டியலில் விழுந்தது குழந்தை அல்ல, பொத்தி பொத்தி கண்ணுக்கு கண்ணாக பாதுகாத்த லட்ச ரூபாய் ஐபோன்தான். ராம்கி, மீனா, திவ்யா உன்னி ஆகியோர் நடித்த பாளையத்து அம்மன் படத்தில் காணிக்கை செலுத்த முயலும்போது, நடிகை திவ்யா உன்னி கையில் இருக்கும் குழந்தை உண்டியலில் விழுந்துவிடும். அப்போது கோயில் நிர்வாகத்தினர் உண்டியலில் விழும் அனைத்தும் அம்மனுக்கே சொந்தம் என்று கெடுபிடியாக கூறிவிடுவார்கள். அப்போது நடக்கும் பாசப்போராட்டமே படத்தின் வெற்றியாக அமைந்தது.

இதே அளவுக்கு தவிப்பைத்தான் அம்பத்தூரை விநாயகபுரத்தைச் சேர்ந்த தினேஷும் அனுபவித்து வருகிறார். சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் நிர்வாகப் பணியில் இருக்கும் இவர், அண்மையில் திருப்போரூர் கந்தசாமி கோயிலுக்கு சென்றார். அப்போது அவர் காணிக்கையாக செலுத்த முயன்றபோது தவறுதலாக அவருடைய ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஐபோனும் உண்டியலுக்குள் விழுந்தது.

அந்த செல்போனை மீட்டுத் தரும்படி, இந்து சமய அறநிலையத்துறைக்கு அவர் மனு அளித்திருந்தார். இந்த நிலையில் கந்தசாமி கோயிலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கைகளை எண்ணுவதற்காக 6 மாதங்களுக்கு பிறகு வியாழக்கிழமை உண்டியல் திறக்கப்பட்டது. அப்போது உண்டியலுக்குள் இருந்த ஐபோனும் எடுக்கப்பட்டது.

உண்டியலில் இருந்த 52 லட்சம் ரூபாய் பணம், 289 கிராம் தங்கம், 6 கிலோ 920 கிராம் வெள்ளியும் கணக்கிடப்பட்டது.

அந்த ஐபோன் குறித்து தினேஷுக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து திருப்போரூர் சென்ற தினேஷ், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ராஜலட்சுமி முன்னிலையில் திறக்கப்பட்ட உண்டியலில் இருப்பது தனது ஐபோன்தான் என உறுதி செய்தார்.

செல்போனை அவர் பெற முற்பட்டபோது, கோயில் உண்டியலில் விழுந்த அனைத்தும் முருகனுக்கே சொந்தம் என்றும் செல்போனை திரும்பத் தரமுடியாது என்று கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

மாறாக உண்டியலில் விழுந்த போனில் உள்ள தரவுகளை மட்டும் எடுத்துக் கொள்ளலாம் என்று கோயில் நிர்வாகத்தினர் சற்று இறக்கம் காட்டினர். உண்டியலில் விழுந்த செல்போனை மீட்டுவிடலாம் என்று ஆசை ஆசையாய் குடும்பத்தினருடன் வந்த தினேஷுக்கு கோயில் அதிகாரிகள் அளித்த பதில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

நிர்வாக ரீதியான முறைப்படி இந்து சமய அறநிலையத்துறைக்கு மீண்டும் மனு அளித்து செல்போனை பெற்றுக் கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்ததன் பேரில் அவர் கந்தனுக்கு ஒரு அரோகராவை போட்டுவிட்டு ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றார்.

Ads
Recent All News News
Trending News
Recent News
Prev
Next